துப்பாக்கி சூட்டில் 64 விவசாயிகள் மரணம்; 50 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத ரணம்
பொங்கலுார்; ஒரு பைசா மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடந்த போராட்டத்தில், துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.தற்போது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தலைமுறை விவசாயிகள் தாங்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் செலுத்தி வந்தனர். 50 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு விவசாய மின் இணைப்பிற்கு எட்டு பைசாவிலிருந்து ஒன்பது பைசாவாக கட்டணத்தை உயர்த்தியது.விவசாயம் நலிவடைந்து இருந்த நிலையில் ஒரு பைசா மின் கட்டண உயர்வை விவசாயிகளால் தாங்க முடியவில்லை. ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தினர்.ஆனால் தான் உயர்த்தியது உயர்த்தியதுதான். அதை திரும்ப பெற முடியாது என்று கருணாநிதி பிடிவாதம் காட்டினார். அதனை தொடர்ந்து தமிழகமெங்கும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இந்தக்காலத்தில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் பியூஸ் கேரியரை எடுத்து இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அந்தக்காலத்தில் டிரான்ஸ்பார்மரையே அகற்றி விட்டனர்.இதனால் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் கருகி அழிந்து நாசம் ஆனது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், 64 பேரை குருவியை சுடுவது போல காவல்துறையை வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றது தி.மு.க., அரசு.நுாற்றுக்கணக்கான விவசாயிகள் குற்றுயிரும் குலை உயிருமாக குண்டடி பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயிகள் மனதில் இந்த சம்பவம் ஆறாத ரணமாகி விட்டது. அதனால், விவசாயிகள் அதை மறக்காமல் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.உயிர்த்தியாகம் செய்த, 64 விவசாயிகளின் நினைவாக இன்று (5ம் தேதி) விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாய அமைப்புகள் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவு இடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.இன்று உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டையும் நடத்துகின்றனர்.