கஞ்சா- குட்கா விற்ற 65 பேர் கைது
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட, 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கண்டறிந்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, அன்றாடம் போலீசார் சுழற்சி முறையில் அதிகப்படியான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, தொடர் சோதனைகள் நடக்கிறது.இதுதவிர, பள்ளி கல்லுாரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. கடைகளில் சோதனை, விற்பனை செய்பவர்களை கைது செய்தும் வருகின்றனர். போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் மொத்தம், 353 நடத்தினர். இதில், 23,172 பேர் பங்கேற்றனர். 22 வழக்கு பதிவு
இச்சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, ஒரு வாரத்தில் மட்டும், 601 இடங்களில் சோதனை செய்யப்பட்டு, சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 29 பேரை கைது செய்து, மொத்தம், 22 வழக்கு பதியப்பட்டு, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார், உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து, 435 இடங்களில் சோதனை செய்து, 36 வழக்கு பதிவு செய்து, 36 பேரை கைது செய்து, 241 கிலோ கிராமை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம், 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 17 கடைகள் சீல் வைத்து மூடப்பட்டது. கஞ்சா விற்பனை255 பேர் கைது
இதுகுறித்து மாவட்ட போலீசார் கூறியதாவது:கடந்த, ஒன்பது மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 255 பேர் கைது செய்து, 206 வழக்கு பதியப்பட்டது. 238 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தொடர்பாக, 705 வழக்கு பதிவு செய்து, 743 பேர் கைது செய்து, 5 டன் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு, 86 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 342 கடைகள் சீல் வைத்து மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.