தற்காலிக மார்க்கெட் கடைகள் ரூ.70 லட்சம் வாடகை நிலுவை; வியாபாரிகள் சங்கத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்
திருப்பூர்: திருப்பூர் தற்காலிக தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள், 70 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக செலுத்துமாறு, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே, காமராஜ் ரோட்டில் இயங்கி வந்தது. கடைகள் சிதிலமடைந்ததால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வளாகம் கட்டப்பட்டது.கட்டுமானப்பணி காரணமாக, தற்காலிகமாக காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பழைய வளாகத்தில் 429 கடைகள் இருந்தன. இதில் 425 பேரில் 248 கடைகள் இந்த வளாகத்தில் செயல்படத் துவங்கின. கொரோனா காலத்தில் வியாபாரத்தை விட்டு விட்டும், இடமாற்றம் செய்தும் பலர் சென்று விட்டனர்.காட்டன் மார்க்கெட் வளாகத்தில் 43 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த கடைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 6.54 லட்சம் ரூபாய் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டது.மார்க்கெட் வளாகம் இடமாற்றம் செய்யப்பட்டதால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தற்காலிக மார்க்கெட் கடைகளையும் மொத்தமாக சங்கம் சார்பில் வாடகை வசூல் செய்து மாநகராட்சியில் செலுத்தி விடுவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர். இந்த வாடகை சங்க நிர்வாகிகள் சார்பில் வியாபாரிகளிடம் வசூல் செய்து, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, பின் மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிய வளாகம் கட்டுமானப்பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. அடுத்த கட்டமாக கடைகள் ஏலம் விடுவதற்கான நடைமுறைகள், ஏலத்துக்கான விதிமுறைகள் ஏற்படுத்துதல் ஆகியன நடந்து வருகின்றன.கடந்த 2020 ஆக., மாதம் முதல் கடந்த ஜன., மாதம் வரை மொத்த வாடகை 3.52 கோடி ரூபாய் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். இதில் கடந்தாண்டு பிப்., மாதம் வரை 2.82 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக வாடகை செலுத்தப்படவில்லை. தற்போது 70 லட்சம் ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு சங்க நிர்வாகிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*
ஏலத்தில் பங்கேற்க முடியுமா?
மாநகராட்சி விதிமுறைகளின் படி, நிர்வாகத்துக்கு வாடகை, வரியினம், ஏல, குத்தகை தொகை போன்ற ஏதாவது நிலுவை இருந்தால், குறிப்பிட்ட நபர்கள் மாநகராட்சி சார்பில் நடைபெறும் எந்த ஏலம் மற்றும் டெண்டரில் பங்கேற்க முடியாது.தற்போது, புதிய வளாக கடைகளுக்கான டெண்டர் விடப்படவுள்ள நிலையில், வாடகை பாக்கி வைத்துள்ள வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறுகின்றனர்.