உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை; அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை; அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றங்களை செய்து, அனைத்து விவசாயிகளும், அதிக தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில், கிராமங்களில் புதிய குளங்கள் உருவாக்குதல்; நீர்நிலைகள், கால்வாய்களை துார்வாருதல், நீர், மண் பாதுகாப்பு மற்றும் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளித்து பணிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தது.அதன்பின், விவசாயம் சார்ந்த பணிகளும் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக, மழை நீரை சேகரிக்கும் வகையில், வரப்பு அமைத்தல்; தென்னை மரங்களுக்கு வட்ட பாத்தி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும். விவசாயி வசிக்கும் கிராமத்திலேயே, அவரது விளைநிலம் இருந்தால் மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பயனாளியாக தேர்வு செய்யும் விதிமுறை உள்ளது.இந்த விதிமுறையால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. கிராமத்திலுள்ள சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெறும் போது, பணிகள் இல்லாமல் தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.அல்லது, ஏற்கனவே கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையே திரும்ப செய்ய வேண்டியுள்ளது. எனவே, இத்திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.மனுவில், 'அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். விவசாயி வேறு கிராமத்தில் வசித்தாலும், அவரது விளைநிலத்தில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை