மேலும் செய்திகள்
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்பு
02-Oct-2025
திருப்பூர்:தீபாவளி பண்டிகையை, திருப்பூரில் வாண வேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்து சிறுவர் -சிறுமியர், இளைஞர்கள் வரவேற்றனர். அதிகாலையில் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை அணிந்தனர். பிறகு, தீபம் ஏற்றி வழிபட்டு, பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். விநாயகரை வழிபட்டு, வீட்டு வாசலில் பட்டாசு வைத்தனர். தொடர்ந்து, இனிப்பு பலகாரத்துடன் குடும்ப சகிதமாக உணவருந்தினர். வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியருடன் இணைந்து பெற்றோரும் பட்டாசுகளை வெடித்தனர். தாத்தா, பாட்டியரையும் அழைத்துவந்து கட்டாயப்படுத்தி, பட்டாசு வைக்குமாறும், கம்பி மத்தாப்பு கொளுத்தச் செய்து, குழந்தைகள் குதுாகலித்தன. 'பட்டாசு கொளுத்தறோம்… பட்டையை கிளப்பறோம்,' என்று கோஷமிட்டபடி பட்டாசு வெடித்த சிறுவர் கூட்டம், அவ்வழியாக சென்றுவந்த அனைவருக்கும் கை குலுக்கி, தீபாவளி வாழ்த்து கூறி நெகிழ வைத்தனர். சில வீடுகளின் முன், கோலப்பொடியில், 'தீபாவளி வாழ்த்துகள்' என்று எழுதி வைத்திருந்தனர். மதிய இடைவேளைக்கு பிறகு, மாலை நேரம் மீண்டும் வாணவேடிக்கையால் திருப்பூர் மாநகரம் மட்டுமல்ல சுற்றுப்பகுதி கிராமங்களும் குதுாகலித்தன. தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிேஷக பூஜையும், முத்தங்கி அலங்காரபூஜையும் நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து, முத்தங்கி அலங்காரம் நடந்தது; மஞ்சள் காப்பு மற்றும் முத்தங்கி அலங்காரத்துடன் அருள்பாலித்த அம்மனை, பக்தர்கள் குடும்ப சகிதமாக வந்து வழிபட்டனர். முன்னதாக, கோவில் வாசலில் பட்டாசு சரம் வெடிக்கப்பட்டது. ----- தீபாவளியை முன்னிட்டு முத்தங்கி அலங்காரத்தில், திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன். சிறப்பு அலங்காரத்தில் அவிநாசிக்கவுண்டம்பாளையம், ஸ்ரீமாகாளியம்மன். பட்டாசு வெடிப்பது ஏன்? தீபாவளி பன்னெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது; நரகாசுரன் அழிந்த நாளில் இருந்து கொண்டாடுவது அல்ல; தீபாவளி நாளில் தான் கண்ணன், அரக்கனை வதம் செய்துள்ளார். அதன் பிறகே, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளி என்றாலே வெடிதான் முக்கியம். பட்டாசு பல்வேறு பெயர்களில் இருக்கலாம்; வெடிப்பது, வாண வேடிக்கை என, பெயரில் வேறாக இருந்தாலும், உள்ளே இருக்கும் மருந்து ஒன்றுதான். மனிதர்களும் உருவத்தில், கல்வியில், தொழிலில் வேறுவேறாக இருந்தாலும், ஆத்மாவில் வேறுபாடு இல்லை. வெடியில் இருக்கும் மருந்து ஒன்றுதான் என்பது போல், நெருப்பில் பட்டதும் வெடித்து 'படார்' என புகை வெளிவருகிறது. அதேபோல், ஞானச்சுடர் என்ற ஒளி பட்டதும், சரீரத்தில் அடங்கியிருக்கும் ஆத்மா, உடைத்துக்கொண்டு வெளிவந்து பரமாத்வாவுடன் கலக்கிறது. இதைத்தான், பட்டாசு வெடிக்கும் தத்துவம் கூறுகிறது. கிருஷ்ண பெருமாள் பேரருளால், அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும். - நாகை முகுந்தன், ஆன்மிக சொற்பொழிவாளர்.
02-Oct-2025