உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீருக்காக நீதிமன்றத்தில் போராட்டம் - ஒருபுறம்; கடலில் கலந்து தண்ணீர் வீணாகிறது மறுபுறம்: சிரவை ஆதினம் ஆதங்கம்

நீருக்காக நீதிமன்றத்தில் போராட்டம் - ஒருபுறம்; கடலில் கலந்து தண்ணீர் வீணாகிறது மறுபுறம்: சிரவை ஆதினம் ஆதங்கம்

பல்லடம்; - பல்லடம் 'வனம்' அமைப்பு சார்பில் நடந்த பனை விதைகள் நடும் விழாவில் பங்கேற்ற சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: உலகம் முழுவதும், இயற்கை சீற்றத்தால் பல்வேறு அழிவுகள் தொடர்ந்து நடந்து வருவதை கண்கூடாக பார்க்கிறோம். இயற்கையின் அழிவு நம்மிடத்தில் இருந்துதான் துவங்குகிறது. நாம் ஒவ்வொருவரும்தான் இதற்கு காரணமாக உள்ளோம். தேவைக்கு அதிகமான நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அதிகமான நுகர்ச்சிக்காக இயற்கையை சுரண்டி அழிக்கிறோம். மணல், மலை என, இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டி அழித்து வருகிறோம். இயற்கைக்கு புறம்பாக பாட்டில் தண்ணீரை பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறோம். குளம், குட்டைகள், ஓடைகள், நதிகள் என, எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் ஆக்கிரமித்துள்ளன. அடுத்த தலைமுறைக்காக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில், 50 சதவீதத்துக்கு மேல் உணவை வீணாக்குகிறோம்.நோய் தாக்குதல், இயற்கை சீற்றம், விலங்குகளால் பாதிப்பு என, பல்வேறு பிரச்னைகளால், உணவு உற்பத்தி செய்ய விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால், தனி மனித ஆசையால் உணவை வீணாக்கி வருகிறோம். நீருக்காக நீதிமன்றத்தில் போராடுகிறோம். இரண்டு மாநில மக்கள் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதுகுறித்த சிந்தனை ஒவ்வொரு தனி மனிதனுக்கு மட்டுமன்றி, அரசுக்கும் இருக்க வேண்டும். அ த்திக்கடவு - அவிநாசி திட்டம் எவ்வாறு இன்று பயனளிக்கிறதோ, அதுபோல், காவிரி போன்ற நதிகள் வாயிலாக தமிழகம் பயனடைய வேண்டும். தமிழகத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் இன்றி, மற்ற மாநிலங்களை எதிர்பார்த்துதான் உள்ளோம். எனவே, இதுகுறித்து அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு தேவை. கல்வி என்பது பொருளாதாரத்தை மட்டுமே நோக்கி இல்லாமல், இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரிகள் இயற்கை சார்ந்த சிந்தனைகளையும் வழங்க வேண்டும். - ராமானந்த குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதினம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ