நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழாநவீன கம்ப்யூட்டர் ஆய்வகம் திறப்பு
அவிநாசி; திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் ஆய்வகம் மற்றும் மாணவ மன்றங்கள் துவக்க விழா என முப்பெரும் விழா நடந்தது.பூண்டி நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, நகராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஈஸ்வரி, முன்னாள் மாணவ பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியை கவிதா வரவேற்றார்.காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. 20 கம்ப்யூட்டர்கள் அடங்கிய உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பூண்டி நகராட்சி தலைவர் குமார், அவிநாசி அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஐவகை நிலங்களின் பெயர் கொண்ட மகிழ் முற்றம் மாணவ மன்றங்கள், இலக்கிய மன்றம், வானவில், கணிதம் மற்றும் ஆங்கில மன்றம் துவக்கப்பட்டன. இளஞ்செஞ்சிலுவை சங்கம் மற்றும் என்.சி.சி., இயக்க துவக்க விழாவும் நடந்தது. திருமுருகன் ரோட்டரி சங்க இன்ட்ராக்ட் கிளப் புதிய தலைவராக பஹீமா பர்வின் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், பூண்டி ரோட்டரி கிளப் பட்டய தலைவர் முருகானந்தம், குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை, அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன், திருமுருகன் ரோட்டரி தலைவர் சார்லஸ் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை செந்தாமரைச்செல்வி நன்றி கூறினார்.