உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகள் பெரும் அலைக்கழிப்பு; திட்டமிடல் இல்லாத மருத்துவ அளவீடு முகாம்

மாற்றுத்திறனாளிகள் பெரும் அலைக்கழிப்பு; திட்டமிடல் இல்லாத மருத்துவ அளவீடு முகாம்

திருப்பூர் : விரிவான ஏற்பாடுகள் மற்றும் திட்டமிடல் இல்லாததால், திருப்பூரில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ அளவீடு முகாமில், மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.மாற்றுத்திறன் உடையவர்கள் உடல் குறைபாடு, செயல் பாதிப்புகள் அதிகரித்து இருந்தால், உதவித் தொகையை, ஆயிரத்தில் இருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகள் உடல்நிலையை பரிசோதித்து, சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக தகவல் பகிரப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை, 10:00 மணி முதல் மருத்துவமனைக்கு வர துவங்கினர். ஆனால், காலை 11:30 மணிக்கு பின்தான் பல்துறை டாக்டர்கள் வந்து, ஒவ்வொருவராக பரிசோதிக்க துவங்கினர்.ஒரே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பலரும் வந்ததால், முகாம் முடிக்க தாமதம் ஏற்பட்டது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர், எழுந்து நிற்க முடியாதவர்கள் வந்து நீண்ட நேரம் காத்திருந்து பெரும் சிரமப்பட்டனர்.இதுபோன்ற முகாம் நடத்தும் போது தக்க முன்னேற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டுமென மாற்றுத்திறனாளிகள், அவர்கள் உடன் வந்தவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

'அடுத்த முகாமில்தவறு நேராது'

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் கூறுகையில், ''மாற்றுத்திறன் குறைபாடு அதிகரித்திருப்பவர் மட்டுமே சிறப்பு முகாமுக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் சென்றுள்ளனர். அடுத்த முகாம் நடைபெறும்போது, தவறுகள் நேரிடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி