உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை, கழிவுநீர் தேங்கிய இடம்... சோலையானது!: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

குப்பை, கழிவுநீர் தேங்கிய இடம்... சோலையானது!: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

திருப்பூர்: திருப்பூரில், குப்பையால் துர்நாற்றம் வீசிய இடம், மக்களின் முயற்சியால், தற்போது பசும் சோலையாக மாறியுள்ளது. திருப்பூரில் ஆறு மாதங்களுக்கு மேலாக நிலவும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடி வருகின்றனர். குடியிருப்பு மற்றும் முக்கிய சந்திப்புகளில் கொட்டப்படும் குப்பை, எடுக்கப்படாமல் தேங்கி வருவதால் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். குப்பையை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி 2வது மண்டலத்துக்குட்பட்ட, 19வது வார்டு திருநீலகண்டபுரத்தில் பஸ் ஸ்டாப்பையொட்டிய பகுதியில் அள்ளப்படாமல் குப்பை தேங்கி, கடும் துர்நாற்றம் வீசியது. கடந்த, இரு வாரங்கள் முன், அப்பகுதியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். உடனடியாக, அங்கு குவியும் குப்பையை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது. பிரதான பகுதியாக உள்ள அந்த இடத்தில், மீண்டும் குப்பை கொட்டுவதை தடுக்கும் நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மேற்கொண்டனர். குப்பை கொட்டுவதை நிறுத்திய மக்கள், மீண்டும் யாரும் குப்பை கொட்டாமல் இருக்கும் வகையில், ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் தற்போது பூச் செடிகளை நட்டு, பூந்தொட்டிகளை வைத்து, பசும் சோலையாக மாற்றியுள்ளனர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டல்லவா! நல்ல மாற்றம் உருவாக வேண்டும் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்துக்கொடுப்பது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் குப்பையைத் தரம்பிரித்து தருவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்னும் முழுமையானதாக இல்லை. இதேபோல், கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. காரணம், அபராதத்தையும் கடை உரிமையாளர்கள் பலர் பொருட்படுத்துவதில்லை. மேலும், இந்தப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், மக்களின் ஒத்துழைப்பின்மையும் காரணங்கள். இருப்பினும் சில கடைகள், துணிப்பைகளைத் தரத் துவங்கியிருப்பதே நல்ல மாற்றம்தான். ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்கள் கிடைக்காமல் செய்தால், குடியிருப்பு பகுதிகளிலேயே மக்காத குப்பைகள் சேகரிப்பு என்பது குறையத் துவங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்