ஆகாயத்தாமரை போர்த்திய மூளிக்குளம்
திருப்பூர்; மூளிக்குளம் நிரம்பியுள்ள நிலையில், வேகமாக படர்ந்து ஆகாயத்தாமரை மீண்டும் குளம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது.மண்ணரை, மூளிக்குளத்துக்கு செல்லும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங் களுக்கு முன் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. வடகிழக்கு பருவ மழை துவங்கிய சில வாரங்களில் குளம் நிரம்பியது. ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், குளமும் நிரம்பியுள்ளது.கடந்த மூன்று மாதங்கள் முன், குளத்தை முழுமையாக துார்வாரி சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பப்பட்டது. இருப்பினும், தண்ணீரில் அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள், குளத்தை மீண்டும் ஆக்கிரமித்துவிட்டன. பெரும்பாலான பகுதிகளில், தண்ணீரை கண்ணில் பார்க்க முடியாத அளவுக்கு பசுமை தளம் போல் செடிகள் படர்ந்துள்ளன.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குளத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், அகற்றுவது குதிரை கொம்பாக இருக்கிறது; ஒவ்வொரு ஆண்டு முயற்சி எடுத்தும், முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. தண்ணீர் வரும் வழியிலேயே, தடுப்புகளை அமைத்து, ஆகாயத்தாமரை வருவதை தடுக்க வேண்டும்; அதற்கு பிறகு, குளத்தில் உள்ள செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும்,' என்றனர்.