தாய்க்கு தொந்தரவு அளித்த பிரச்னை; தட்டிக்கேட்ட மகனுக்கு கத்தி குத்து
திருப்பூர்; திருப்பூரில், தாயாரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை தட்டி கேட்ட மகனை, கத்தியால் குத்திய பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். திருப்பூர், அவிநாசி ரோடு, அணைப்புதுாரை சேர்ந்தவர் சிவகாமி, 45. மகன் அஜய், 15. வெள்ளியங்காட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். சிவகாமி வீட்டுக்கு அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். சில நாட்கள் மட்டும் வேலை செய்து நின்றார். வேலை செய்த சம்பளத்தை ஒப்பந்ததாரர் ஆனந்திடம், 54 வாங்கினார். ஆனந்த், சிவகாமிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால், அவரிடம் சிவகாமி பேசுவதை தவிர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள மளிகை கடைக்கு சிவகாமி சென்றார். அவ்வழியாக வந்த ஆனந்த், அவரிடம் பேச சென்றார். ஆனால், அவர் பேச மறுத்தார். உடனே, ஒருமையில் பேசி, வாக்குவாதத்தில் ஆனந்த் ஈடுபட்டார். இதுகுறித்து வீட்டுக்கு சென்று மகனிடம் கூறினார். தாயை அழைத்து கொண்டு ஆனந்திடம் கேட்க சென்றார். அப்போது, முத்தையன் கோவில் அருகே போதையில் நின்றிருந்த ஆனந்திடம், தாயிடம் தகராறு செய்தது குறித்து தட்டி கேட்டார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இருவரையும் குத்தினார். காயமடைந்தவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ஆனந்தை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.