உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... ஆரவாரத்துடன் உள்ளம்

ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... ஆரவாரத்துடன் உள்ளம்

திருப்பூர்: திருப்பூரில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்துச்சென்றதால், பொதுமக்களின் உள்ளங்கள் மகிழ்ச்சியடைந்தன.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை காரணமாக, நொய்யல் நீரால் பயன்பெறும் குளங்கள் நிரம்பியுள்ளன. திருப்பூரில், நொய்யல் ஆற்றில் நேற்று காலை முதல் நீர் வரத்து அதிகரித்திருந்தது. நேரம் செல்ல, செல்ல வெள்ளம் பெருக்கெடுத்ததால், காலேஜ் ரோடு - மங்கலம் ரோட்டை இணைக்கும் பழைய அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வழங்கும், மங்கலம் அருகில் உள்ள நல்லம்மன் கோவில் தடுப்பணையில் வெள்ளம் பொங்கி வழிந்தது. ஆற்றில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கோவிலுக்கு செல்லக்கூடிய சிறு பாலமும் மூழ்கி விட்டது. மழைப்பொழிவால் பொதுமக்கள் உள்ளங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.-----

ஆற்றில் குறைந்த உப்பு அளவு

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நொய்யலாற்றை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.அனுமதி பெறாமல் இயங்கும் நிறுவனங்கள், சாயம், பிரின்டிங் கழிவுநீரை திறந்துவிட வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் குழுவினர் கரையோரம் ரோந்து சென்று வருகின்றனர். நீர் மாதிரி சேகரித்து, நீரில் கரைந்துள்ள மொத்த உப்புகளின்(டி.டி.எஸ்.,) அளவைப் பரிசோதிக்கின்றனர்.திருப்பூரில் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும் 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. பெரும்பாலானவை, கரையோரங்களில் உள்ளன. மழைக்காலம் என்பதால், ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு மையமும், தங்கள் அருகாமை நொய்யலாற்றில் நீர் மாதிரி சேகரித்து தினமும் டி.டி.எஸ்., அளவை பரிசோதிக்கின்றன.'''சாதாரண காலங்களில் 2 ஆயிரம் ஆக இருந்த டி.டி.எஸ்., தற்போது, 1000 டி.டி.எஸ்., ஆக குறைந்துள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரிய குழுவினர் மட்டுமின்றி, பொதுசுத்திகரிப்பு மையங்கள், தினந்தோறும், நொய்யலின் டி.டி.எஸ்., அளவை பரிசோதித்து, அறிக்கை அனுப்பிவருகின்றன. மங்கலத்தில் 1000; சிறுபூலுவப்பட்டியில் 1042 என்ற அளவில் டி.டி.எஸ்., உள்ளது'' என்று அதிகாரிகள் கூறினர்.---

விதி மீறினால் நடவடிக்கை

பொதுசுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலையுடன் கூடிய சுத்திகரிப்பு மையங்களுக்கு, மழைக்காலங்களில் கடைபிடிக்கவேண்டிய அம்சங்கள் குறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். எந்தவகையிலும், சாயக்கழிவுநீர் வெளியேறி, ஆற்றில் கலக்கக்கூடாது; விதிமீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.- மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்-----

பாலிதீன் கழிவுகளால் அடைபடும் கால்வாய்

திருப்பூரில் சேரும் குப்பைகளில், பாலிதீன் கழிவுகளைத் தரம் பிரிக்க, ஒவ்வொரு மண்டலத்திலும் இடம் ஒதுக்கப்படுகிறது. மாதம் 200 டன் சேகரிக்கப்படுகிறது. இவை, வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மட்டுமே சேகரிக்கப்படுவதாகும். ஆனால், மார்க்கெட், ஓட்டல், நிறுவனங்களின் கழிவுகள் மற்றும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்படும் குப்பைகள் பாறைக்குழியில் கொட்டப்படுகின்றன. பெரும்பாலும் பாலிதீன் கழிவுகள் பிரிக்கப்படுவதில்லை. மாநகரில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாலிதீன் கேரி பேக்குகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.பொதுமக்கள் சாக்கடை கால்வாயில் பாலிதீன் கழிவுகளைப் போட்டு விடுகின்றனர். இது கால்வாயில் கழிவுநீர் சீராக செல்வதை தடுக்கிறது. மழை வரும்போது மழை நீர் செல்ல முடியாமல் கால்வாயை விட்டு வெளியேறி வீட்டுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. குப்பையில் போடும் பாலிதீன் பொருட்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----

ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு பணி பாதிப்பு

மத்திய அரசின் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணி நடக்கிறது. முதல் பிளாட்பார்ம் முன்புறம் நுழைவு வாயில் அமைக்கும் பணி, புதிய கவுன்டர்கள் அமைக்கும் பணி ஒரு புறம் நடந்து வரும் நிலையில், டூவீலர் ஸ்டாண்ட்களை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டுமான பணி கடந்த செப்., மாதம் துவங்கியது. துாண்களை நிலைநிறுத்தி, கான்கிரீட் போடப்பட்டு, பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால், கட்டுமானப் பணி நடந்த இடங்களில் மழைநீர் தேங்கியது. ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது.''ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மழைநீர் வெளியேறும் வழித்தடமாக இவ்விடம் இருந்தது. தற்போது ஸ்டாண்ட் தரைத்தளம் கட்டப்பட்டு வருகிறது. பணி முடிந்து, நீர் தேங்கும் அளவை விட உயரப்படுத்தும் போது, மழைநீர் தேங்க வாய்ப்பில்லை. மழைநீர் முழுமையாக வெளியேற்றிய பின், கட்டுமான பணி துவங்கும்'' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.----

துர்நாற்றம்... துயரம்

ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு முன்பதிவு செய்யும் மையம் முதல் பிளாட்பார்ம் அருகே, 'கட்டுசிப்ப அலுவலகம்' என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த அலுவலகம் முன் மழைநீர் வழிந்தோட வழியில்லை. மழை பெய்தால், நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.மங்களூரு, எர்ணாகுளத்தில் இருந்து தினசரி வந்திறங்கும் மீன்கள் கட்டுசிப்ப அலுவலகம் அருகே இறக்கி, நீண்ட நேரத்துக்கு பின் வேறு வாகனங்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. ஐஸ்கட்டி உடன் வரும் மீன் பார்சல்களில் வழியும் நீர், தேங்கியுள்ள மழைநீருடன் இணைவதால், துர்நாற்றம் வீசுகிறது. கட்டுசிப்ப அலுவலகம் முன் மழைநீர் தேங்காமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.----

24 மணி நேரத்தில் 28.63 மி.மீ., மழை

திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 28.63 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக, திருப்பூர் - அவிநாசி ரோடு கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 73 மி.மீ., - குண்டடத்தில் 71 மி.மீ.,க்கு கன மழை பெய்தது. உடுமலையில் 60; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 42; தாராபுரத்தில் 41; உப்பாறு அணையில் 36; மடத்துக்குளத்தில் 35; அவிநாசியில் 28; திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 27; கலெக்டர் அலுவலக சுற்றுப்பகுதிகளில் 26; நல்லதங்காள் ஓடையில் 25; பல்லடத்தில் 23; அமராவதி அணை பகுதியில் 19 மி.மீ.,க்கு மிதமான மழை பதிவானது.காங்கயத்தில் 15 மி.மீ., - திருமூர்த்தி அணையில் 13; திருமூர்த்தி அணை (ஐ.பி.,) 13; வெள்ளகோவிலில் 9; மூலனுாரில் 7; வட்டமலைக்கரை ஓடையில் 5.20; ஊத்துக்குளியில் 4.30 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை