கிட்னி பாதித்த மாணவருக்கு சி.இ.ஓ., தலையீட்டால் சீட்
திருப்பூர்:திருப்பூர் அருகே பெருமாநல்லுாரிலுள்ள அரசு பள்ளியில், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மாணவரை சேர்க்க மறுத்த சர்ச்சையில், கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தினர். திருப்பூர் மாவட்டம், பொங்குபாளையம் ஊராட்சி, சக்தி கார்டனைச் சேர்ந்தவர் கார்த்தி, 38. லாரி டிரைவர். மனைவி காயத்ரி, பனியன் தொழிலாளி. இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் ஸ்ரீதர், 16. இவர் கோவை - ஒண்டிப்புதுாரில், பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். ஸ்ரீதருக்கு சிறு வயதில் சிறுநீரக நோய் பாதிப்பால், ஒரு சிறுநீரகம் அறுவை சிகிச்சையால் அகற்றப்பட்டது. தொடர்ந்து, மற்றொரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. இதில், சிறுநீர் வெளியேற பை பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், பாட்டி சரோஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மாணவரை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், தாய் காயத்ரி, மகனை பொங்குபாளையம் அழைத்து வந்தார். இதையடுத்து, மகனை பெருமாநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க, பிளஸ் 1 வகுப்பில் விண்ணப்பித்தார். பள்ளியில் இடவசதி இல்லை என தலைமை ஆசிரியர் மந்திரமூர்த்தி மறுத்து விட்டார். பெற்றோர் கல்வித்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து, மாணவர் ஸ்ரீதரை பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார். நேற்று மதியம் ஸ்ரீதர், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தார். தலைமையாசிரியர் மந்திரமூர்த்தி கூறுகையில், ''மாணவரின் உடல்நிலை குறித்து, பெற்றோர் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. சொல்லி இருந்தால் முன்கூட்டியே பள்ளியில் சேர்த்திருப்போம்,'' என்றார்.