ஒரு தார் சாலை மண் சாலையாக மாறியது!
பல்லடம்; பல்லடத்தில், தார் சாலை சுருங்கி மண் சாலையாக மாறி வருவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து சி.டி.சி., காலனி செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், பள்ளி, கோவில்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. பல்லடம் -- செட்டிபாளையம் ரோட்டுக்கு செல்லும் இணைப்புச் சாலை என்பதால், அதிகளவிலான வாகன ஓட்டிகள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். குழாய் பதிப்பு பணிக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த இணைப்பு சாலை தோண்டப்பட்டது. அதன்பின், ரோடு சீரமைக்கப்படவில்லை. குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழிகளால், ரோடு, கரடு முரடாக உள்ளது. இதனால், எட்டு அடி அகலமுள்ள ரோடு கரைந்து, 3 அடியாக சுருங்கி மண் தடமாக மாறி வருகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.