காற்று மாசுபட்டால் கலங்கும் எதிர்காலம்
உலகில், ஒவ்வொரு ஜீவராசியும் சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியும், அந்தக் காற்றுக்கே சொந்தம்.'மரம், செடி, கொடி வளர்த்து, பசுமை பரப்பை அதிகரிப்பது தான், காற்று மாசில் இருந்த தப்பிக்க வழி' என இயற்கை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என அறைகூவல் விடுத்து வருகின்றனர்.மரங்கள், மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்ைஸடு உள்ளிழுத்து, உயிர் வாழ உதவும் சுத்தமான ஆக்ஸிஜனை கொடுக்கிறது என்பது, அறிந்த விஷயம் தான். ஆனால், ''வீடு, வணிக வளாகம், தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் வாயிலாக வெளியேறும் புகை, கழிவு மட்டும் காற்று மாசுக்கு காரணமல்ல; நாம் தினசரி பயன்படுத்தும் மின்சாரமும் தான் ஒரு காரணம்,'' என்கிறார், இந்திய காற்றாலை சங்கத்தின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகரும், தமிழக மின் வாரிய ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினருமான திருமூர்த்தி. எல்லை விரிக்கும்காற்றாலை
அவர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாக கொண்டு உடுமலை, கிணத்துக்கடவு, பல்லடம், தாராபுரம், தேனி, திருநெல்வேலி ஆரல்வாய்மொழி, வள்ளியூர் நாகர்கோவில் வழியாக வீசும் காற்றின் திசையிலேயே காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.தற்போது, காற்று இருப்பதால் கரூர் வரை கூட காற்றாலை நிறுவுகின்றனர். குறை அடர்த்தி கொண்ட காற்றைக்கூட, மின்னாற்றலாக மாற்றக்கூடிய, நவீன இயந்திரங்கள் வந்துவிட்டதும், காற்றாலைகளின் எல்லை விரிவடைகிறது.காற்றாலை மின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியில், இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. பெரிய தொழில் நிறுவனத்தினர், காற்றாலை மற்றும் சோலார் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்.காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, 20 முதல், 25 ஆண்டு பழமையான காற்றாலைகள் உள்ளன; அவை, 250 கிலோ வாட்ஸ் திறன் கொண்டவையாக மட்டுமே உள்ளன. அவற்றை, 2, 3 மெகாவாட் திறன் கொண்டவையாக மாற்ற முடியும்.இதற்கு அரசு மற்றும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மானியம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஊக்குவித்தால், 2,000 முதல், 3,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.கடலுக்கு அடியில் காற்றாலை''காற்று என்பது, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. காற்றாலை தடையின்றி கிடைக்க, காற்று தொடர்ச்சியாக இயங்க ஐரோப்பிய நாடுகளை போன்று, கடலுக்கு அடியில் காற்றாலை உருவாக்கினால் அதிகளவு மின்சாரம் எடுக்க முடியும்; தடையின்றி மின்சாரம் கிடைக்கும். ஆனால், அதற்கு மிகப்பெரும் அளவில் செலவாகும் என்பதால், இதுவரை அத்தகைய முயற்சியில் நாம் இறங்கவில்லை. இருப்பினும், இன்னும், 5 முதல், 10 ஆண்டில் அந்த சாதனையையும் நாம் நிகழ்த்துவோம்''என்கின்றனர் வல்லுனர்கள்.சமீப ஆண்டுகளாக, காலநிலை மாற்றத்தை அதிகளவில் உணர முடிகிறது; வெயில் சமயத்தில் மழையும், மழைக்காலத்தில் வெயிலும் நிலவுகிறது. எந்தாண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு மே மாதம், காற்றாலைகளில், கூடுதல் அளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 10 முதல், 15 சதவீதம் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும்.காற்று மாசுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதற்கான ஆணிவேர் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான், அதன் தீவிரத்தை சரி செய்ய முடியும். அந்த வகையில், மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை பரப்பை அதிகரிப்பதால் மட்டும் காற்று மாசு நீங்கிவிடாது.அதோடு சேர்த்து, கார்பன் மாசும் குறைக்கப்பட வேண்டும்.'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்கின்றனர். ஒரு மரம், ஓராண்டில், 20 டன் கார்பன் டை ஆக்ைஸடை உள்ளிழுக்கிறது. ஆனால், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், 160 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. அப்படியானால், ஒவ்வொரு வீட்டிலும், ஒரு மரம் மட்டும் வளர்த்தால் போதாது.வெப்ப ஆற்றல் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான், 70 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது.இதை குறைத்து, சோலார் மற்றும் காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் வாயிலாக காற்று மாசு பெருமளவில் குறையும்; மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதோடு, காற்று மாசு குறைப்பதன் வாயிலாக தான் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.- திருமூர்த்தி, உறுப்பினர், தமிழகமின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம்.