உடுமலை;வணிக நிறுவனங்களில், மளிகைப்பொருட்களின் விலையை ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மளிகை மற்றும் காய்கறிக்கடைகள், மாலை வரை செயல்படுகிறது. இங்குள்ள சில கடைகளில், இத்தகைய பொருட்கள், லாப நோக்குடன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.ஏற்கனவே, மளிகைப்பொருட்களின் விலை ஏற்றத்தால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். அதேநேரம், ஒவ்வொரு பொருளின் விலையும், கடைகளுக்கு ஏற்ப, மாறுபட்டு காணப்படுவதாக புகார் எழுகிறது.மக்கள் கூறியதாவது: பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை பட்டியல் இட்டு, பெரிய வியாபார கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி வருகின்றனர்.அதற்கான பணத்தை, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்துகின்றனர். எவரும், விலையை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள், பொருட்களின் விலை உயர்வால், பாதிக்கின்றனர்.ஒரு பொருளின் விலை, ஒவ்வொரு கடைக்கும் மாறுபடுகிறது. பொருட்களின் தரத்திற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், அதற்கான தொகை கூடுதலாக உள்ளது. ஜி.எஸ்.டி., என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. அதற்கான முறையான 'பில்' அளிப்பதில்லை. வணிக நிறுவனங்களில், மளிகைப்பொருட்களில் விலையை நிர்ணயம் செய்ய, துறை ரீதியான அதிகாரிகள் முன் வர வேண்டும்.இதன் வாயிலாக, வியாபாரிகளும் மக்களும் பயனடைவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.