பல்லடம் வட்டாரத்தில் சராசரியை கடந்த மழை
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், கடந்த ஆண்டு பருவ மழை, சராசரி அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.விவசாயத் தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பிரதான காய்கறி பயிர்கள் மட்டுமின்றி, சோளம், மக்காச்சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட நீண்டகால பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசனத்தை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடந்து வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வாயிலாக, ஆண்டுக்கு, சராசரியாக, 500 மி.மீ., மழை பதிவாகின்றது.இதன் காரணமாக, பாசனப் பரப்புகள் பயனடைவதுடன், பொதுமக்களின் தண்ணீர் தேவையும் பூரத்தியாகின்றது. பருவமழைகளில் ஏதேனும் மாறுபாடு ஏற்படும்போது, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பாசனப் பரப்புகளும் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, சராசரி மழையை காட்டிலும் கூடுதலாக கிடைத்துள்ளது. ஜன., முதல் ஜூன் வரையிலான காலகட்டங்களில் குறைந்த அளவு மழையே கிடைக்கும். இக்காலகட்டத்தில், கோடை மழை, 126 மி.மீ., பெய்து விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.இதேபோல், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்காத நிலையில், அக்., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால், 176 மி.மீ., மலை கிடைத்தது. இவ்வாறு, கோடை மழை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளால், கடந்த ஆண்டு, சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக, 571 மி.மீ., மழை பதிவானது. கடந்த ஆண்டு கூடுதல் மழை கிடைத்ததால், எதிர்வரும் நாட்களில், கோடை காலம் வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.