திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மை விதி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்தம் பணி வேகமெடுத்துள்ளது; பயனற்று கிடந்த குப்பை அரவை மையங்களில், புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாநகராட்சியில், 2.72 லட்சம் வீடு, கடை, வணிக நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இருப்பினும், வெளியேறும் குப்பைகளை கொட்டுவதற்கோ தரம் பிரிப்பதற்கோ மாநகராட்சிக்கென சொந்த இடம் இல்லாததால், திடக்கழிவு மேலாண்மை என்பது பெயரளவில் கூட இல்லை. இந்நிலையில், குப்பை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது; அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றை கடுமையாக பின்பற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாலிதின் பை புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த, குப்பைகளை தரம் பிரிக்கப்பட்ட நிலையில் மட்டுமே வாங்குவது, அவற்றை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கு அனுப்பி வைப்பது உள் ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறது. இப்பணியில், தமிழக கழிவு மேலாண்மை மன்றத்தினர் தங்களை இணைத்து, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர். மேக்ஸின் இந்தியா நிறுவனத்தினர் சார்பில், குப்பையை அரைத்து மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்குரியதாக மாற்றும் இயந்திரங்கள் தருவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் வெங்கமேடு மற்றும் நல்லுாரில் உள்ள மையங்களில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. உள்ளாட்சிகள் 'விறுவிறு': திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, மாநிலம் முழுக்க உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன. அருகேயுள்ள ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி சார்பில், வீடு, கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்காத பாலிதீன் குப்பைகளை, பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தினர் வாயிலாக மறுபயன்பாட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டு, கிட்டத்தட்ட, 13 டன் குப்பை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ''அந்தந்த உள்ளாட்சி அமைப்பினரின் முழு ஒத்துழைப்பு அடிப்படையில், இதுபோன்ற தொடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தமிழக கழிவு மேலாண்மை மன்ற செயலார் வீரபத்மன் தெரிவித்தார்.