உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்னல் பழுதால் தினமும் விபத்து

சிக்னல் பழுதால் தினமும் விபத்து

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம், பை-பாஸ் சாலையில் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. தென்மாவட்டத்தில் இருந்து, நுாறு பஸ்கள் வந்து செல்கிறது. பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள நால்ரோடு சந்திப்பில் சிக்னல் பழுதாகி, பத்து நாட்களாகிறது. சிக்னல் வேலை செய்யாததால், தினம் ஒரு விபத்து தொடர்கதையாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் எதிர் புறம் அமராவதிபாளையம், பெருந்தொழுவு செல்லும் ரோடு உள்ளது. மூன்று ரோடு சந்திப்பாக உள்ள இவ்விடத்தில் 'பீக்ஹவர்ஸ்' வாகனங்கள் தாறுமாறாக சென்றால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால், விபத்தை தடுக்க சிக்னல் ஓராண்டுக்கு முன் நிறுவப்பட்டது. கடந்த, 20 நாட்களாக சிக்னலில் விளக்குகள் எரிவதில்லை. தாராபுரம் - திருப்பூர் சாலையில் வரும் வாகனங்கள் வேகத்தடை இல்லாததால், வேகமாக பயணிக்கின்றன. பஸ் ஸ்டாண்ட் விட்டு வெளியேறும் பஸ்களும் வேகத்தை குறைக்காமல் திரும்ப முற்படுவதால் தினம் ஒரு விபத்து ஏற்படுகிறது. மஞ்சள் விளக்கு கூட எரிவதில்லை. பொதுமக்கள் கூறியதாவது: சிக்னலில் துவக்கத்தில் சிவப்பு விளக்கும், நேரம் ஒதுக்கீடும் இருந்தது. பின் நேரம் ஒதுக்கீடு அழிக்கப்பட்டு, சிவப்பு, பச்சை விளக்கு மட்டும் ஒளிர்ந்தது. பை-பாஸ், 24 மணி நேரமும் வாகனங்கள் பயணித்துக் கொண்டே இருக்கும் சாலை என்பதால், மஞ்சள் விளக்கு மட்டும் விட்டு விட்டு ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்தனர். ஒரு மாதமாக மஞ்சள் விளக்கும் கூட பழுதாகி விட்டது. ஒரு வாரம் முன் டூவீலரில் வந்த தம்பதிகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வெளியே வருவதை பார்த்து, வேகத்தை குறைக்க முடியாமல் தடுமாறி சரிந்து விழுந்தனர். 3 நாள் முன், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை பஸ் ஸ்டாண்ட் திரும்ப முற்படும் போது தடுமாறி விழுந்தார். சிக்னல் வேலை செய்யாததால், தினமும் விபத்து ஏற்படுகிறது. பெரிய விபத்து நேரிடும் முன் சிக்னலை இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்து போலீசார் வாகனங்கள் விதிமீறி பயணிக்காமல் தடுக்கும் வகையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி