உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தவருக்கு போலி ஆவணம் இ- சேவை மையம் மீது நடவடிக்கை; கலெக்டரிடம் பா.ஜ., வலியுறுத்தல்

வங்கதேசத்தவருக்கு போலி ஆவணம் இ- சேவை மையம் மீது நடவடிக்கை; கலெக்டரிடம் பா.ஜ., வலியுறுத்தல்

திருப்பூர்; சட்டவிரோதமாக வரும் வங்கதேசத்தவருக்கு போலி ஆவணங்கள் தயாரிக்க உதவி செய்யும் 'இ-சேவை' மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பா.ஜ., வினர் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகர மற்றும் பல்லடம் பகுதிகளில், வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதும், போலியான ஆவணங்களை தயாரித்து திருப்பூர் வந்து சேர்ந்ததும், அதிர்ச்சி அடைய வைக்கிறது.இதுதொடர்பான கண்காணிப்பு தொடர்ந்தாலும், கடந்த ஜூன் 19ம் தேதி மட்டும், வங்கதேசத்தில் இருந்து வந்திருந்த 26 பேரை போலீசார் கைது செய்தது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலியாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு தயாரித்து, ஏஜன்டுகள் மூலமாக, திருப்பூருக்கு வந்து பாதுகாப்பாக பதுங்கிவிடுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து, பனியன் தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வந்தால், 3000 ரூபாய் முதல், 5000 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கிறது; அதற்காக, ஏஜன்டுகள், ஆட்கள் குறித்து சரியாக விசாரிக்காமல், போலி ஆவணங்களை நம்பி அழைத்து வந்துவிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு என்ற பெயரில், போலியான ஆவணங்களை நம்பி, தொழிற்சாலைகளும் வேலைக்கு சேர்க்கின்றன. இத்தகைய முறைகேடுகளை தடுப்பதுடன், முறைகேட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான பா.ஜ., வினர், நேற்று கலெக்டரிடம் மனு அளித்த பின், கூறியதாவது:வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வரும் ஏஜன்டுகள் சரிவர விசாரிக்காமல், போலி ஆவணங்களை நம்பி அழைத்து வருகின்றனர். சில நாட்கள் நிறுவனங்களில் பணியாற்றும் அவர்கள், பிறகு வெளியே சென்று, பதுங்கிவிடுகின்றனர். ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களும், சரியான ஆவண சரிபார்ப்பு செய்கிறதா என்று, போலீசார் உறுதி செய்ய வேண்டும். வடமாநில தொழிலாளர் இல்லாமல், பனியன் தொழில் நடத்துவது என்பது இயலாத காரியம். இருப்பினும், சட்டவிரோதமாக குடியேறும் நபர்களிடம் இருந்து பனியன் நிறுவனங்களையும், திருப்பூரையும் பாதுகாக்க வேண்டும். அதற்காக, ஒருங்கிணைந்த பாதுகாப்பு வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். -------------------------------------திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பா.ஜ.,வினர்.போலியான ஆவணங்கள் தயாரிக்க, அரசு அதிகாரிகளும், 'இ-சேவை' மையங்களும் உடந்தையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது

குறைபாடுகளுடன்

வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் பல்வேறு குறைபாடுகளுடன் இருக்கிறது. இறந்த வாக்காளர், குடிபெயர்ந்தவர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஓட்டுரிமை உள்ளவரை நீக்க, விண்ணப்பித்தாலும், உரிய நடவடிக்கை இல்லை. சில அரசு அதிகாரிகள் துணையுடன், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை, வாக்காளர் பட்டியலில் இணைக்க முயற்சி நடக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு பெற உதவும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் 'இ-சேவை' மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பா.ஜ., வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஜூலை 12, 2025 15:36

தென் மாவட்டத்திற்கு இரயிலை விட சொல்லி வந்த மக்கள் இனி வங்கதேசத்திற்கு வண்டியை விட கோரிக்கை வைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்... இருக்கையே வேண்டாம் டாப்பில் அமர்ந்து உற்சாக பயணம்.


முக்கிய வீடியோ