பாரம்பரியம், கலாசாரத்தை மறந்தது வேதனை; நடிகர் சரத்குமார் ஆதங்கம்
பல்லடம்; ''முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் கலாசாரங்களை மறந்து வாழ்வது வேதனையாக உள்ளது,'' என, பல்லடம் வனம் அமைப்பின் வனாலயத்துக்கு வந்த நடிகர் சரத்குமார் ஆதங்கப்பட்டார். பல்லடம்-, திருச்சி ரோட்டில், வனம் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வனாலயத்துக்கு, நடிகர் சரத்குமார் நேற்று வந்தார். வனம் அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், வனம் அமைப்பு நிர்வாகிகள் விஸ்வநாதன், நடராஜன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் சரத்குமார் பேசியதாவது: மழையை வரவழைக்கும் சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. அவ்வகையில், பல்லடம் வனம் அமைப்பின் வாயிலாக, ஒவ்வொரு ராசி, நட்சத்திரங்களுக்கு ஏற்ப மரங்கள் நட்டு வளர்த்து வருவது சிறப்பு மிக்க பணியாக உள்ளது. மரம் வளர்ப்பு என்று கூறியதும், நடிகர் விவேக் ஞாபகம் தான் வருகிறது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம், கலாச்சாரங்களை மறந்து வாழ்ந்து வருவது வேதனையாக உள்ளது. அவர்கள் பின்பற்றிய நல்ல வழிமுறைகளை தான் நமக்கு எடுத்துரைத்து சென்றுள்ளனர். அறிவு, திறமை, ஆற்றலை நாமே வைத்துக் கொண்டு இருந்தால் அதனால் எந்த பயனும் இல்லை. அது மற்றவர்களுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். வந்தோம்; சென்றோம் என்று இல்லாமல், இந்த உலகத்துக்கு நாம் எதையாவது செய்து செல்ல வேண்டும். நாம் நடந்து சென்ற பாதையை மற்றவர்கள் பின்பற்றும் வகையில் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.