உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாமழை போற்றுதும்! வேகமாக நிரம்பும் குளங்கள்; வெள்ள அபாய எச்சரிக்கை

மாமழை போற்றுதும்! வேகமாக நிரம்பும் குளங்கள்; வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை : உடுமலை பகுதிகளில் பெய்யும் கன மழையால், பெரிய குளம், ஒட்டுக்குளம் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015க்கு பின், நடப்பாண்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், நகர பகுதியிலுள்ள வழியோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனம், தளி கால்வாய் வாயிலாக, ஏழு குளங்கள் மற்றும் வலையபாளையம் குளம் பாசன வசதி பெறுகின்றன. இதன் வாயிலாக, 2,786 ஏக்கர் நேரடி பாசன வசதி பெறுகிறது.ஏழு குளம் பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, தளி கால்வாய் வழியாக, கடந்த, ஆக.,18ல் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்வதால், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏழு குளங்களில், உடுமலை நகரப்பகுதியை ஒட்டி உள்ள, ஒட்டுக்குளம், பெரிய குளம், செங்குளங்களுக்கு, நீர்வரத்து அபரிமிதமாக உயர்ந்ததால் நிரம்பியுள்ளன. பாதுகாப்பு கருதி, குளங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பாதுகாப்பாக இருங்க!

நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மழையால், ஏழு குளங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன. உபரி நீர் ஒட்டுக்குளம் சென்று, அங்கிருந்து வெளியேறும் நீர், தங்கம்மாள் ஓடை, ராஜவாய்க்கால் வழியாக, உப்பாறு அணைக்கு செல்லும்.தற்போது ஒட்டுக்குளத்தின் மொத்தமுள்ள, 10 அடியில், 9.20 அடி நீர் மட்டம் உள்ளது, நீர்வரத்து அதிகரித்து வருவதால், உபரி நீர் ராஜவாய்க்கால், தங்கம்மாள் ஓடை வழியாக திறந்து விடப்படுகிறது.பெரியகுளத்தின் மொத்தமுள்ள, 11.55 அடியில், 10.50க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால், உபரி நீர் மிகைந்தோடி வழியாக திறக்கப்பட்டுள்ளது.இதனால், உடுமலை நகர பகுதியில், தங்கம்மாள் ஓடை, ராஜவாய்க்கால் ஓடை மற்றும் பெரிய குளம் உபரி நீர் செல்லும் ஓடை கரையின் இரு புறமும் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.புக்குளத்தில், மழை நீர் ஓடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியது.

ஓடையில் நீரோட்டம்

பெதப்பம்பட்டி சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழையால், உப்பாறு ஓடைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின், சராசரி மழையளவு, 681 மி.மீ., ஆகும். இதில், 70 சதவீதம் (477 மி.மீ.,), வடகிழக்கு பருவமழை வாயிலாகவே கிடைக்கிறது. கடந்தாண்டு கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்தது. ஒன்றியத்திலுள்ள, 40க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. இந்நிலையில், கனமழையால் பெதப்பம்பட்டி, சுங்காரமுடக்கு, சிந்திலுப்பு உள்ளிட்ட இடங்களிலுள்ள, உப்பாறு ஓடைகளுக்கு நீர் வரத்து கிடைத்தது.மேலும், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு, ஓடை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, வழியோரத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி விட்டன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

9 ஆண்டுகளுக்கு பின் நீர்வரத்து

உடுமலை பகுதிகளில் அமைந்துள்ள குளங்கள் ஒவ்வென்றாக நிரம்பி வருகின்றன. கடந்த, 2015ம் ஆண்டு, இதே போல், குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.9 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, உடுமலை பகுதிகளில் அதிகனமழை பெய்ததால், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் மழை நீரும் குளங்களுக்கு வருவதால், தற்போது வேகமாக நிரம்பி வருவதோடு, பெரியகுளம், ஒட்டுக்குளம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ