விடுபட்ட குளம், குட்டை இணைப்பு; அமைச்சர்கள் ஆலோசனை
திருப்பூர்; அனைத்து துறைகள் சார்பில் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், முன்னிலை வகித்தார்.அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது; அவிநாசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது; அவிநாசி பேரூராட்சியில் புறவழிச்சாலை அமைப்பது; அவிநாசி மேட்டுப்பாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவது; தாராபுரம் சட்டசபை தொகுதியில் குடிநீர் ஆதாரம் மேம்படுத்தி, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது; வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துவதற்குரிய பணி; கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது; தாராபுரத்தில் உள் விளையாட்டு அரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.