மருத்துவக்குழுவினருக்கு பரிந்துரைக்க வேண்டிய வாகன விபத்து வழக்குகள் குறித்து ஆலோசனை
திருப்பூர், ; வாகன விபத்து குறித்த வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவது நாளுக்கு நாள் அதிகரித்து, இது குறித்த வழக்கு விசாரணைகளும் கோர்ட்டுகளில் அதிகரித்து வருகிறது. விபத்துகளில் பாதிக்கப்படுவோர் இழப்பீடு கேட்டு கோர்ட்டுகளில் தனியாக வழக்கு பதிகின்றனர். இழப்பீடு வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. திருப்பூர் மாவட்டங்களில் தற்போது வாகன விபத்து இழப்பீடு குறித்து சிறப்பு கோர்ட், தீர்ப்பாயம் ஆகியன செயல்படுகிறது. மேலும், மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நிகழ்ச்சிகளில் கூட அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் விபத்து இழப்பீடு குறித்ததாகவே உள்ளது. இவ்வழக்குகளில், விபத்தில் பாதிக்கப்படுவோர் உயிரிழப்பது, நிரந்தர ஊனம் அடைவது, குறிப்பிட்ட அளவிலான பாதிப்பு, பெரிய அளவிலான காயம் லேசான காயமடைதல் போன்றவற்றுக்கு இழப்பீடு கேட்டு வழக்கு போடுகின்றனர். இந்த பாதிப்பு குறித்து மருத்துவர் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இதற்காக பாதிக்கப்படும் நபர்கள் அரசு மருத்துவமனைகளை அணுகி அதற்கான சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. சில வழக்கு விசாரணைகளில், வழக்குதாரரின் பாதிப்பு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கேள்வி எழுப்பும் போது, புகார்தாரர் தரப்பு தடு மாறும் நிலை உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வாகன விபத்து சிறப்பு கோர்ட் நீதிபதி முன்னிலையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. விபத்து வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் பங்கேற்கின்றனர். மருத்துவ குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டிய வழக்கு விவரங்கள், மருத்துவர் குழு வாயிலாக புகார் தாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துவது குறித்து விவாதிக்கப் படவுள்ளது.