தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அகஸ்தீஸ்வரர் கோவில் படித்துறை வெள்ளத்தில் மூழ்கியது
தாராபுரம்: தாராபுரம் அமராவதி ஆற்றில் கரைகளை தொட்டு வெள்ள நீர் சென்றதை, மக்கள் பாலத்தில் நின்று ரசித்தனர்.தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்ததால், தமிழகம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை நீர்மட்டம், 87 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து அணையிலிருந்து, 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்-பட்டது. இதனால் தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டது. அமராவதி ஆற்றங் கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் படித்துறை வெள்ளத்தில் மூழ்கியது. கரைகளை தொட்டு செல்லும் வெள்ள நீரை காண பாலத்தின் மேலே, மக்கள் கூட்டம் கூடியது.அதேசமயம் கார்த்திகை தீப நாளான நேற்று, அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்களை, ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.வெள்ள அபாய எச்சரிக்கை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அமராவதி அணையில் இருந்து தற்போது, 36 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் உப நதிகள், அணைகள் நிரம்பியுள்ளதால், 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே அமராவதி ஆற்றங்கரையோர பகுதிமக்கள், ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.