உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்டல கூட்டத்தில் பொறி பறந்த குற்றச்சாட்டுகள்

மண்டல கூட்டத்தில் பொறி பறந்த குற்றச்சாட்டுகள்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலக்குழு கூட்டம், நேற்று திருப்பூர் முருகம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல உதவி கமிஷனர் குமரன், உதவி பொறியாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

முறையற்ற பணி

கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம்: சுபத்ரா தேவி, தி.மு.க.,: இடுவம்பாளையம் எவர் கிரீன் பகுதியில் பெரும் நிதி செலவிட்டு பாதாள சாக்கடை பணி முடிக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டிலும், வீடுகளுக்கு முன்பும் தேங்கியுள்ளது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. முறையாக திட்டமிட்டு பணி செய்யாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். உரிய தீர்வு காண வேண்டும். சின்னசாமி, அ.தி.மு.க.: மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு பணியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுவரை எவ்வளவு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. பாதாள சாக்கடை பணியிலும் முறைகேடு நடந்துள்ளது. பணிகள் முறையாகச்செய்யப்படவில்லை.

ஆக்கிரமிப்புகள்

அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க.: மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பல பகுதிகளிலும், சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சி சொந்தமான இடங்களைக் கண்டறிந்து, மீட்க வேண்டும். அங்கு மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் போன்றவை ஏற்படுத்த வேண்டும்.

குப்பை தேக்கம்

சேகர், அ.தி.மு.க.: நகரப் பகுதியில் சேகரமாகும், குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. தற்போது துாய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வார்டுகளில் குப்பை தேங்கி வருகிறது. மழைக்காலமாக உள்ளதால், இதனால் மேலும் பிரச்னை ஏற்படும். காலேஜ் ரோடு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மண்டல கூட்டத்திலும் மாநகராட்சி கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் இது குறித்து அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

கழிவுநீர் தேக்கம்

சாந்தி, தி.மு.க.,: லிட்டில் பிளவர் நகரில் ஆழ்குழாய் மோட்டார் பழுதாகி, சர்வீஸ் செய்தும் பயன்படுத்த முடியவில்லை. புதிய மோட்டார் பொருத்த வேண்டும். முல்லை நகர், 3வது வீதி சாக்கடை கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மணிமேகலை, மா.கம்யூ.,: எனது வார்டு பகுதியில் தார் ரோடு அமைக்க, பல இடங்களில் பூமி பூஜை நடந்தது. அத்தோடு சரி, இதுவரை ரோடு போடும் பணி துவங்கப்படவில்லை. நொச்சிபாளையம் பிரிவில், மழை நீர் வடிகால் வசதி இன்றி, மழைநீரும் கழிவுநீரும் கலந்து ரோட்டில் தேங்கி நிற்கிறது. போக்குவரத்துக்கு பெரும் சிரமம் உள்ளது. சாந்தாமணி, தி.மு.க.,: மங்கலம் ரோடு, கருப்பராயன் கோவில் பகுதி முதல், குமரன் கல்லுாரி வரை தெரு விளக்கு அமைக்க வேண்டும். பிரச்னைகள் குறித்து தகவல் அளித்தால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை. கவிதா, தி.மு.க.,: திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கழிவு நீர் வீடுகளின் முன்புறம் தேங்கி நிற்கிறது.

கிடப்பில் பணி

சாந்தாமணி, ம.தி.மு.க.,: பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் நிறைவடையாமலும், துவங்கப்படாமலும் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. அதிகாரிகளை கேட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவை உள்ளது. எனவே, அவர்கள் பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும். கடந்த இரண்டு நாள் மழையில், ஆலங்காடு பகுதியில், மழை நீர் மற்றும் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து, வடியாமல் உள்ளது.

தீர்வு காணப்படுகிறது

அனைத்து வார்டுகளிலும், அடிப்படையான குடிநீர், தார் ரோடு, தெரு விளக்கு, சாக்கடை கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கவுன்சிலர்களுடன் அதிகாரிகளும், ஒப்பந்த நிறுவனத்தினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். - பத்மநாபன், மண்டல தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை