உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அமராவதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்; ஆற்றில் வெள்ளப்பெருக்கு

உடுமலை; உடுமலை அமராவதி அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதோடு, துணை ஆறுகளும் இணைத்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையால், ஜூலை, 18 ல் நிரம்பியது. தொடர்ந்து, வட கிழக்கு பருவ மழையால், கடந்த, நவ.,27 ல் அணை நிரம்பியது. தற்போது மூன்றாவது முறையாக நேற்று நிரம்பியது.கடந்த இரு நாட்களாக, மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்த கன மழையால், பாம்பாற்றிலும், கொடைக்கானல் மேற்குபகுதிகளில் பெய்த கன மழையால், தேனாற்றிலும், வால்பாறை கிழக்கு பகுதிகளில் பெய்த மழையால், சின்னாறு வழியாக, அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து அதிகரித்தது.நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 87.73 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,836.61 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து, வினாடிக்கு, 7,977 கனஅடியாக இருந்தது.அணை நிரம்பியதையடுத்து, வெள்ள காலங்களில் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக திறக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இரு மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு. வினாடிக்கு, 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து, நீர் வரத்து படிப்படியாக அதிகரித்ததால், நீர் திறப்பும் அதிகரித்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, அதிகபட்சமாக, வினாடிக்கு, 36 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு வெள்ள நீர் ஓடியது.

துணை ஆறுகளும் இணைந்தன

அமராவதி ஆற்றின் துணை ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.இவ்வாறு, அமராவதி ஆற்றுக்கு குதிரையாறு, வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு, பரப்பலாறு, குடகனாறு, பச்சையாறு மற்றும் ஓடைகள் வழியாக நீர் வரத்து அதிகரித்ததால், ஆற்றில் வினாடிக்கு, 60 ஆயிரம் கனஅடி வரை வெள்ள நீர் ஓடியது.வழியோரத்திலுள்ள விளை நிலங்கள், தோப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, சேதத்தை ஏற்படுத்தியது.அமராவதி அணையிலிருந்து, கடைசியாக, கடந்த, 2018., ஆக., 16ல், அதிகபட்சமாக, 33,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பின், நேற்று, 36 ஆயிரம் கனஅடி வரை நீர் வெளியேற்றப்பட்டு, ஏழு ஆண்டுக்கு பின், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதகுகள் பழுது?

அதே போல், அமராவதி அணையில் உபரி நீர் வெளிப்போக்கி, 9 மதகுகளை கொண்டதாகும். நேற்று, 7 மதகுகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. இரு மதகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், திறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.வெள்ள காலங்களில் மதகுகளை பராமரித்து, தயார் நிலையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சூரியா
டிச 14, 2024 06:30

அடுத்த சட்ட மன்றக் கூட்டத்தில், காவிரி நீர் திறக்காதற்காக, கர்நாடக அரசை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.


முக்கிய வீடியோ