உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவல நிலையில் அமராவதி அணை பூங்கா! வசதிகளை மேம்படுத்துவது அவசியம் 

அவல நிலையில் அமராவதி அணை பூங்கா! வசதிகளை மேம்படுத்துவது அவசியம் 

உடுமலை : முக்கிய சுற்றுலா தலமான அமராவதி அணை பூங்காவை, நடப்பாண்டு கோடை சீசனிலும், சுற்றுலா பயணியர் எட்டிப்பார்க்கவில்லை; அடிப்படை பராமரிப்பு பணிகளை கூட பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ளாதது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாகி வருகிறது.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், அணைக்கரையில், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால், அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிரிடையே முன்பு வரவேற்பு இருந்தது.எனவே, அப்பகுதியில், முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்தப்பட்டது. அணையில், படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு, வார விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையின் போதும், பிஸியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது, எட்டிப்பார்க்க ஆளில்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. கோடை விடுமுறை சீசனிலும், சுற்றுலா பயணியர் அந்த பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.காரணம், அணை பூங்காவில், பசுமை காணாமல் போய், நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.உயிரியல் பூங்காவில், பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல், வெறும், கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.இருக்கைகளும் இதே நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வாறு, பூங்கா என்பதற்கான அடையாளத்தை அமராவதி அணை பூங்கா இழந்து விட்டது.அணை பூங்காவை பராமரித்து, மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இடைவெளியில், பொதுப்பணித்துறைக்கு, ஒதுக்கப்படும் குறைந்தளவு நிதியிலும், எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும், அமராவதிக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிய சுற்றுலா பயணியர், தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். இதனால், அமராவதி அணை பூங்கா ஆளில்லாத சுற்றுலா தலமாக மாறி விட்டது. இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அணை பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை