அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் சிலை கண்டுபிடிப்பு
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், அமராவதி அணை அருகே அமைந்துள்ள கல்லாபுரம், அமராவதி ஆறு, குமணன் துறை பகுதியில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டது. இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை அறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: இது, கொங்கு சோழர் கால சிற்பமாக உள்ளதால், பார்வதி சிலையாக இருக்கலாம். அற்புத வேலைப்பாடுகளுடன் காணப்படும் இச்சிலை, ௫க்கு ௫ அடி வட்ட வடிவமாக உள்ள ஆவுடை எனும் லிங்கத்தின் அடிப்பகுதியுடன், ௪ அடி உயரம் உடையதாக இருக்கிறது. பரந்த மணி மகுடம், எட்டு கரங்களும், அணிகலன்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இடுப்பு கச்சை, இரு கால்களிலும் மிகுந்த வேலைப்பாடுகளுடன், ஆடை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காலின் பாதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வட்ட வடிவ ஆவுடையின் மத்தியில் சிலை உள்ளது. இதில், எண்கோண வடிவதுளை உள்ளதால், பெரிய லிங்கம் இருந்திருக்கலாம். இந்த சிலைகள், கி.பி., 12ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.