ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் : திருமுறை பாராயணம் செய்து பக்தர்கள் பரவசம்
திருப்பூர்: ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மஹா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு, ஆருத்ரா தரிசனம் உட்பட, ஆண்டுக்கு ஆறுமுறை அபிேஷக பூஜை நடக்கிறது. அதில், ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் நடக்கும் ஆனி திருமஞ்சனமும் முக்கியமானது.அதன்படி, சிவாலயங்களில் நேற்று ஆனித்திருமஞ்சன வைபவம் விமரிசையாக நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்கள், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் மஹா அபிேஷகம் நடந்தது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 11:00 மணிக்கு துவங்கி, பஞ்சாமிர்தம், பால், தேன், இளநீர், பன்னீர் உட்பட, 16 வகை திரவியங்களால் ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.மதியம் உச்சிக்கால பூஜையின் போது, அலங்கார பூஜை நடந்தது. சிவனடியார்களும், பக்தர்களும், பன்னிரு திருமுறை பதிகங்களில் இருந்து பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர். பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.