பழைய ஆயக்கட்டு பகுதியில் வேளாண் துறை ஆய்வு சாகுபடி தொழில் நுட்பங்கள் அறிவிப்பு
உடுமலை ;அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிரில், குருத்துப்புழு, இலைப்பேன் தாக்குதல் மற்றும் நுண்ணுாட்ட சத்து குறைபாடு உள்ளதால், மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவித்துள்ளது. அமராவதி பழைய ஆயக்கட்டு, கல்லாபுரம், ராமகுளம் பகுதியில், 400 ஹெக்டேர் பரப்பில், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, உதவி வேளாண் அலுவலர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெற் பயிரில் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: இயந்திர நடவு மேற்கொண்ட, நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல், பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. மற்ற பகுதியில், ஒரு சில வயல்களில் நெல் குருத்துப்புழு மற்றும் இலைப்பேன் தாக்குதல் காணப்படுகிறது. இதற்கு, தயோ மீத்தாக்சோம் 25 சதவீதம் மருந்தினை, ஏக்கருக்கு, 40 கிராம் வீதம் தெளிக்க வேண்டும். மேலும், நெற் பயிர்களில் துத்தநாகம் மற்றும் நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறை காணப்படுகிறது. இதற்கு, ஏக்கருக்கு, 5 கிலோ வீதம் நெல் நுண்ணுாட்டம், 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். வேளாண் துறையில், விவசாயிகளுக்கு தேவையான நெல் நுண்ணுாட்டம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், துத்தநாக சல்பேட், ஏக்கருக்கு, 10 கிலோ மணலுடன் கலந்து துாவ வேண்டும். மேலும், நெற் பயிர்கள் தற்போது துார்கட்டும் பருவத்தில் உள்ளதால், ஏக்கருக்கு, 25 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை மேலுரமாக வயலுக்கு இட வேண்டும். மேலும், விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.