நகை பறிப்பு ஆசாமியின் அப்பீல் மனு தள்ளுபடி
திருப்பூர்; திருப்பூரில் நகை பறிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து, அப்பீல் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் முகமது பீர் சுல்தான், 42. தற்போது திருப்பூர் கே.வி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.இவர் கடந்த 2023, பிப்., மாதம், மங்கலம் ரோடு, வடக்கு நேதாஜி வீதியில், வாக்கிங் சென்று கொண்டிருந்த விஜயலட்சுமி என்பவர் அணிந்திருந்த 2.5 பவுன் எடையுள்ள தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார்.இது குறித்த புகாரின் பேரில் கே.வி.ஆர்., நகர் மற்றும் போலீசார் அவரைக் கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை ஜே.எம்.எண்: 2 கோர்ட்டில் நடைபெற்றது.இதில், செயின் பறிப்பில் ஈடுபட்ட முகமது பீர் சுல்தானுக்கு, 3 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2024ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மீது அவர் மேல் முறையீடு செய்தார்.இந்த மனு எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ், அதை தள்ளுபடி செய்தும், ஜே.எம்., கோர்ட் விதித்த தீர்ப்பை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.