ரசிகர்களின் சினிமா ரசனை மாறுகிறதா?
'சி னிமா' என்ற ஒற்றை வார்த்தை சமுதாயத்தில் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக செயல்படுகிறது. கல்வி, பொழுதுபோக்கு, விழிப்புணர்வு என, பலவற்றை, பல பரிணாமங்களில் வழங்குகிறது. நாணயத்தின் இரு பக்கத்தை போன்று, சினிமா, சமூகத்தில் நல்ல மற்றும் கெட்ட தாக்கத்தைஏற்படுத்தும். கூர்மையான ஆயுதமாக விளங்கும் சினிமாவில், எந்த வகையான திரைப்படங்களை பார்வையிட வேண்டும், வரவேற்க வேண்டும் என்ற பொறுப்பு, ரசிகர்களான நம் கையில் தான் உள்ளது. அதே நேரத்தில், சமுதாயத்துக்கு நல்ல படங்களை வழங்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இயக்குனருக்கும் உள்ளது. சமீபத்தில் வெளியான, இரண்டு படங்கள் இரு விதமான கலவையான விமர்சனங்களை மக்கள் மத்தியில் பெற்றது. ஹீரோ இட்லிக்கடை நடத்துவதாக கதையமைப்பு கொண்ட படம் 'கிரின்ஜ்', 'பூமர்' என்று விமர்சிக்கப்பட்டது. தவறான கலாச்சாரத்தை முன்னிறுத்திய மற்றொரு படம், அதே இளைஞர்களால் வரவேற்று கொண்டாடப்படுகிறது. மனநல ஆலோசகரும், கான்பிடன்ட் விங்ஸ் டிரஸ்ட் நிறுவனருமான அபிநயா ஜெகதீஷ் கூறியதாவது: பண்பாடு, கலாசாரம் குறித்து பேசும் போது, நம்மை 'பூமர்', 'கிரின்ஜ்' என்று பச்சை குத்தி விடுகின்றனர். உறவு முறை குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு படம், இளைஞர்களுக்கு தவறான விஷயத்தை கொண்டுபோய்ச் சேர்க்கிறது. சினிமா சக்தி வாய்ந்த ஒன்று. நம்மை ஆட்சி செய்த பலர், அங்கிருந்து தான் வந்தனர். இதுமாதிரியான படங்கள், குடும்பம், உறவுகள் என, கட்டமைப்பை சிதைக்கும் நிலையை ஏற்படுத்தும். உறவுகளுக்குள் உள்ள, அந்த 'எமோஷனல்', பாசம், பற்று என, அனைத்தும் போய்விடும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அடிப்படை குடும்ப கட்டமைப்புக்கு, வெடி வைக்கும் விஷயம். இதே காலத்தில் வெளியான மற்றொரு படத்தில் குடும்பம், பெற்றோர், வாழ்க்கை முன்னேற்றம் என, வாழ்வியல் குறித்து, நம்முடன் பிணைந்து அழகாக தெரிவித்து இருப்பார்கள். இதுபோன்ற படங்கள், குடும்ப கட்டமைப்பின் அவசியம் குறித்து இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும். 'ஹார்ன் பில்' என்ற ஒரு பறவை, அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும். அதன் வாழ்க்கையில், ஒரு இணையை தேர்ந்தெடுத்த பின், அந்த இணையுடன் மட்டும் தான் இருக்கும். இரை தேடுவதில் ஆரம்பித்து, இளைப்பாறுவது வரை, எங்கு சென்றாலும், ஆண் பறவையும், பெண் பறவையும் இணைந்தே தான் செல்லும். இணை இறந்து போனாலும் கூட, வேறு யாருடன் சேராது. தனித்து தான் வாழும். மூன்றறிவு, நான்கு அறிவு உள்ள பறவைக்கு இருக்க கூடிய, அந்த பற்றுதல், மனிதனாக உள்ள நமக்கு இல்லாமல் போவது சமுதாயத்துக்கு பெறும் ஆபத்தான ஒன்று. இவ்வாறு, அவர் கூறினார். பறவைக்கு இருக்க கூடிய, அந்த பற்றுதல், மனிதனாக உள்ள நமக்கு இல்லாமல் போவது சமுதாயத்துக்கு பெறும் ஆபத்தான ஒன்று.