கலைத்திருவிழா போட்டி; அசத்திய மாணவியர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி, ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிகளில் நேற்று நடந்தது. ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கலைத்திருவிழா போட்டிகள், திருப்பூர் ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிகளில் நடந்தது. கலெக்டர் மனிஷ்நாரணவரே, அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தனர். மேயர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் கலை, இசை, நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில், 100 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாளான நேற்று, ஜெய்வாபாய் பள்ளியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம், மணல் சிற்பம், கருவியிசை, பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட, 34 வகையான போட்டிகள் நடந்தன. நஞ்சப்பா பள்ளியில் ஒன்று, இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு 6 வகை, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 12 வகை என, 18 வகையான போட்டிகள் நடந்தன.