அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் தாக்குதல் ; பாதுகாப்பு கேட்டு மனு
உடுமலை : உடுமலை அருகே, அ.தி.மு.க., பிரமுகரின் காரை உடைத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சியை சேர்ந்தவர் ஈஸ்வரன்; அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்.இவர் நேற்று குடிமங்கலம் போலீசில் அளித்த புகார் மனு:அனிக்கடவு பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்ய போலீசில் அனுமதி கேட்டிருந்தோம். இதையடுத்து, அந்த கோழிப்பண்ணை உரிமையாளர், தி.மு.க., மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், எனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து, வீட்டிலும் தாக்குதல் நடத்தினர்.தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கும், எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் மனு ரசீது மட்டும் வழங்கியுள்ளனர்.இந்நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, அனிக்கடவிலுள்ள கோழிப்பண்ணை முன், ஆர்ப்பாட்டம் நடத்த, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.