பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி குளோரினேஷன் முறை
பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையிலும், பிளீச் சிங் பயன்படுத்தி தண்ணீர் குளோரினேஷன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. நோயாளிகளின் நலன் கருதி, தற்போது தானியங்கி குளோரினேஷன் முறையில், தண்ணீர் சுத்தி கரிக்கப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைப்படி, தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. மேல்நிலைத் தொட்டியாக இருந்தாலும், தரைமட்ட தொட்டியாக இருந்தாலும், இந்த குளோரினேஷன் முறை பயனளிக்கும். மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட குளோரினேஷன் முறை என்பதால், மிகவும் பாதுகாப்பானது. பொதுவாக, பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி தான் தண்ணீர் குளோரினேஷன் செய்யப்படுகிறது. இதனால், சில உடல் நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இன்றைய அவசர காலகட்டத்தில், தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது என்பதும் சாத்தியமில்லை. இதற்கு, தானியங்கி குளோரினேஷன் முறை மிகவும் உதவுகிறது. மேலும், தானியங்கி குளோரினேஷன் முறையால் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. குறைந்த பணி, எளிமையான பராமரிப்பு முறை என, காலத்துக்கு ஏற்ற இந்த தொழில்நுட்ப முறையை, உள்ளாட்சி அமைப்புகளிலும் பயன்படுத்தினால், மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.