உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி என்றாலும் காசியேதான்!

அவிநாசி என்றாலும் காசியேதான்!

திருப்பூர் : ''அவிநாசி என்றாலும் காசியேதான்; இறைவனே உகந்து வந்து அருளாட்சி புரியம் புண்ணிய பூமி'' என்று திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. இக்கோவில் பெருமைகள் குறித்து, திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:சிவ பரம்பொருள் மூன்று நிலைகளில் வியாபித்திருக்கிறது; கண்ணுக்கு புலப்படாத வகையில், அருவமாக கயிலாயத்தில் காட்சி அளிக்கிறார். கண்ணில் பார்க்கும் வகையில், கல்யாணசுந்தரேசராக, ஆனந்த நடராஜமூர்த்தியாகவும் உருவமாக அருள்பாலிக்கிறார்.அருவுருவ வடிவில், ஜகமெங்கிலும் லிங்கமாக காட்சியளிக்கிறார். பூலோகத்தில், 1008 லிங்க வடிவங்களில், ஆனந்த பொருளுண்டு; அதியச பொருளுண்டு; அற்புத பொருளுண்டு; புண்ணிய பொருளுண்டு; புனித பொருளும் உண்டு.

அரிய பொருளே அவிநாசியப்பா...!

அவிநாசியப்பரை மட்டுமே, அரிய பொருள் என்று சொல்கிறார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர். எதற்காக அரிய பொருள் என்கிறார் என்றால், காசிக்கு நிகரான அவிநாசி என்பதால். பொதுவாக, அவிநாசியை, காசிக்கு நிகரான தலம் என்று கூறுகிறோம்.ஒரு பொருளுக்கு நிகராக இருந்தால், நிகரானது என்று கூறுகிறோம். காசிக்கு நிகரானது அவிநாசி என்று கூறுவதை ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால், ஒரு பொருள் விளங்குகிறது.காசி விஸ்வநாதர் என்ற பெயரில், தமிழகத்தில் பல சன்னதிகள் உள்ளன. அவிநாசி அப்படியானது அல்ல; காசி விஸ்வநாதரின் சுயம்பு லிங்கத்தின் அடியில் இருந்து வேர் பரவி வளர்ந்து, அவிநாசியில் சுயம்புவாக எழுந்தருளியது; அன்னை பார்வதியும் பூஜித்தாள் என, தல வரலாறு கூறுகிறது.இதன்மூலம், காசியில இருக்கிற சுயம்பு விஸ்வ நாதர் தான் அவிநாசிலிங்கேஸ்வரர் என்பதை அறிய வேண்டும். அவிநாசி தலம் ஒன்றுதான், காசியாகவே மாறிப்போயிருக்கும் தலம். அவிநாசி என்றாலும் காசியேதான்; இறைவனே உகந்து வந்து அருளாட்சி புரியம் புண்ணிய பூமி அவிநாசி.

அழிவில்லாத அவிநாசி

பிரபஞ்சம் அழிந்த போதும் கூட, 1,008 சிவாலயங்களில் சில அழியாமல் இருந்தன. இருப்பினும், பிரம்மா, விஷ்ணு உட்பட, முப்பத்து முக்கோடி தேவர்களும், 'எங்கே ஒளிந்துகொள்வது' என்று பரமேஸ்வரின் கேட்டு, அழிவில்லாத அவிநாசித்தலத்தில் வந்து ஒளிந்தனர்; அதனாலேயே, திருப்புக்கொளியூர் என்ற திருநாமம் பெற்று விளங்குகிறது.குருபக்தியும், சிவபக்தியில் சிறந்த சிவனடியார்களுக்கு, சுந்தரமூர்த்தி நாயனார் மூலமாக சிவனருளும் கிட்டியது. திருக்கடையூரில் கூட, மார்க்கண்டேயர் என்றும் சிரஞ்சீவியாக வாழ இறைவன் அருளினார். அவிநாசி திருத்தலத்தில், முதலையுண்ட மழலையை, நான்கு ஆண்டுகள் கழிந்து, ஏழு வயது சிறுவனாக மீட்டுத்தந்தது, அவிநாசியப்பரின் பேரருள்.

இழந்ததை மீட்டுத்தருவார்

அவிநாசியப்பரை வணங்கும் அடியார்களுக்கு, நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக, வாழ்வில் வளர்ச்சி ஏற்படும். இழப்புகளை மீட்டுக்கொடுத்து, நல்வாழ்வு அருளும் ஆற்றல், அவிநாசிப்பரிடம் மட்டுமே இருப்பதும் தனிச்சிறப்பு.காசி விஸ்வநாதர் எப்படி, அவிநாசி தலத்தில் அவிநாசியப்பராக அருள்பாலிக்கிறாரோ, அதேபோல், கங்கை தீர்த்தமும் காசி கிணறு வடிவில் அவிநாசியில் இருக்கிறது. கங்கை தீர்த்தம் பல இடங்களில் இருந்தாலும், அவிநாசியில் மட்டுமே, கங்கை தீர்த்தமே, காசி கிணறாக, ஒவ்வொரு பொழுதும், அருள்பொங்க நிற்கிறது.காசி கிணறும், கங்கை தீர்த்தமும் ஒன்றுதான்; இரண்டுமே ஆதியாக, மூலமாக இணைப்பு பெற்றதும், அவிநாசிக்கு ஒரு தனி சிறப்பு.இவ்வளவு அம்சம் பொருந்தியிருக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. தங்கள் பிறவிப்பயனை அடைய, அவிநாசியப்பரை தொழுது, வணங்கி வளம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி