கலெக்டர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் நேற்று, சரஸ்வதி பூஜை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக ஏழு தளங்களிலும், 30க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இன்று, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை, நாளை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை அடுத்து, கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள், தங்கள் அலுவலகங்களில் நேற்று சரஸ்வதி பூஜை கொண்டாடினர். காலை முதலே, அலுவலகங்களை துாய்மை செய்து தயார்படுத்திவைத்தனர். மாலை நேரம், பூஜைகள் நடைபெற்றன. சத்துணவு, அங்கன்வாடி, உணவு பாதுகாப்பு, தொழிலாளர் துறை, நில அளவை, கலால், மாவட்ட வழங்கல், வேளாண், தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை உள்பட பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. அலுவலக வாயில்களில் மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டன. சரஸ்வதி, பார்வதி, லட்சுமி ஆகிய சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, அவல், பொரி, கடலை, சுண்டல், பாயாசம் மற்றும் பழங்கள் படையலிடப்பட்டது. விளக்கேற்றப்பட்டு, ஊதுபத்தி முதலான துாபதீபங்களோடு பூஜை நடத்தப்பட்டது. அரசு அலுவலர்கள், மக்கள் பணி சிறக்கவேண்டுமென, முப்பெருந்தேவியரை வழிபட்டனர். சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தால், நேற்று மாலை நேரம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பக்தி மணம் கமழ்ந்தது.