குழந்தை ஆடை கண்காட்சி புதிய வாய்ப்புகள் வசமாகும்
திருப்பூர் : குழந்தைகளுக்கான ஆடைகளை காட்சிப்படுத்தும், 81வது தேசிய பின்னலாடை கண்காட்சி, வரும் 23ம் தேதி மும்பையில் துவங்குகிறது.திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தை நாடு முழுவதும் வலுவாக்கவும், வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற துணி உற்பத்தியை தமிழகத்தில் முக்கிய தொழிலாக மாற்றவும், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமும்(சைமா), இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கமும் கூட்டு முயற்சியை துவக்கியுள்ளன.மும்பையில் ஆண்டுதோறும் நடக்கும், 'பேப்' என்ற, பின்னல் துணி கண்காட்சியை பார்வையிட, நேரில் வந்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை அழைத்தனர். திருப்பூர் நிறுவனங்களும், அக்கண்காட்சியில் பங்கேற்றன. விரைவில், இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்க கிளையை, திருப்பூரில் துவக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.இந்நிலையில், 81வது தேசிய பின்னலாடை கண்காட்சி, மும்பையில் உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி அரங்கில் வரும் 23ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடைகள் மட்டும் இடம்பெறும் இக்கண்காட்சி, திருப்பூர் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளருக்கு, புத்தம் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கண்காட்சியில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிகம் பங்கேற்க வேண்டுமென, இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.