வாழைக்கு வேலிப்பயிர் தேவை; விவசாயிகளுக்கு அட்வைஸ்
உடுமலை; 'பலத்த காற்றுக்கு வாழை பாதிப்பதை தவிர்க்க, வேலிப்பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பராமரிக்க வேண்டும்,' என தோட்டக்கலைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், நீர் வளம் அதிகமுள்ள விளைநிலங்களில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.நேந்திரன், பூவன் மற்றும் இலைத்தேவைக்கு பயன்படும் ரகங்கள், அதிகளவு நடவு செய்யப்படுகிறது. இந்நிலையில், வேகமாக காற்று வீசும் போது, வாழை மரங்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகின்றன.அறுவடைக்கு தயாராக உள்ள மரங்கள், ஒடிந்து விழுவது மற்றும் வளர்ச்சி தருணத்திலுள்ள, கன்றுகளில், இலைகள் கிழிந்து வளர்ச்சி பாதிக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு, தீர்வாக, காற்றின் வேகத்தால், வாழை பாதிப்பதை தவிர்க்க, பூப்பதற்கு முன்போ அல்லது பூக்கும் தருணத்திலோ குச்சிகளை கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில், கன்று நடவின் போதே, வரப்பில், அகத்தி போன்ற பல்வேறு வேலிப்பயிர்களை நடவு செய்யலாம்.வாழை மரங்களை விட உயரமாக வளரும் வேலிப்பயிர்கள், காற்றுக்காலத்தில், பாதிப்பை தவிர்க்க உதவும்,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.