வங்கதேச ஊடுருவல்காரர்கள் தமிழகத்துக்கு வைத்துள்ள குறி ஹிந்து முன்னணி எச்சரிக்கை
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:வங்கதேச பெண் ஒருவர், திரிபுரா மாநில அகர்தலா பகுதியை சேர்ந்த முகமது யாசின் மியா என்பவரை காதலித்தார். அவர், அந்த பெண்ணுக்கு போலி ஆதார் கார்டு உருவாக்கி கொடுத்துள்ளார். வேலை வாங்கி தருவதாக, அப்பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து, தவறான வழியில் தள்ளியது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.ஊடுருவல்காரர்கள் தஞ்சமடையவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் ஏற்ற சூழல் உள்ள மாநிலமாக, தமிழகம் உள்ளது. ஊடுருவல்காரர்களின் முதன்மை தேர்வாக தமிழகம் மாறியிருப்பதை இச்சம்பவம் எடுத்து காட்டுகிறது. அவ்வகையில், சட்டம் - ஒழுங்கும், மாநில பாதுகாப்பும் ஆபத்தான சூழலில் இருக்கிறது.ஊடுருவல்காரர்கள் நாட்டின் எல்லையோர மாநிலங்களில் தஞ்சமடைவது நடந்து வருகிறது. ஆனால், 1000 கி.மீ., தொலைவில் உள்ள தமிழகத்தை தேர்வு செய்து தலைமறைவாக இருப்பது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதை உறுதி செய்கிறது. போலி ஆவணங்கள் தயாரித்து கொடுப்பவர்கள் நாடெங்கும் பரவியுள்ளதை பல சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது.இவ்வாறான போலி அடையாள அட்டை வாயிலாக, பிற தேசத்தினர் எளிதாக மக்களோடு மக்களாக கலந்து விடுகின்றனர். இது, தேச பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்து விளைவிக்கும்.எனவே, இவ்வழக்கை மாநில அரசு, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை பேர் ஊருடுவி இருக்கின்றனர், பின்புலத்தில் இயக்குபவர்கள் யார் உள்ளிட்ட விவரங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.