மத்திய பட்ஜெட்டில் சிறந்த அம்சங்கள்
நம்பிக்கை அடிப்படை
ஆடிட்டர் ராமநாதன்:பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தால், திருப்பூரில் ஏற்படும் நுால் தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேலை வாய்ப்பு அதிகம் உள்ள 'கிளஸ்டர்'ல் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். குறுந்தொழில்களுக்கு, கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'பாரத் டிரேடு நெட்' என்ற பெயரில், ஏற்றுமதி சேவைகளை ஒற்றைச்சாளர முறையில் வழங்கும் புதிய 'டிஜிட்டல் பிளார்ட்பார்ம்' கொண்டு வரப்படும். புதிய வருமான வரிச்சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவரை, சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த சட்டம், இனி நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கான வருமானவரி பிடித்தம் உச்சவரம்பு, 50 ஆயிரமாக இருந்தது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை வருவாய்க்கான, வருமான வரி பிடித்தம் உச்சவரம்பு, ஆண்டுக்கு, 2.40 லட்சம் ரூபாயாக இருந்தது, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறந்த அம்சங்களை கட்டாயம் வரவேற்கலாம். வளர்ந்த நாடாகும்
ஆடிட்டர் தனஞ்செயன்:மத்திய பட்ஜெட், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக அமையும். கடன் உத்தரவாத அளவு, ஐந்து கோடியாக இருந்தது, 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன்பெற வாய்ப்புள்ளது. 'ஸ்டார்ட் அப்' கடன் உத்தரவாத தொகை, 10 கோடியாக இருந்தது, 20 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த எம்.எஸ்.எம்.இ.,கள், 20 கோடி ரூபாய் வரை நீண்டநாள் கடன் பெறலாம். பட்ஜெட் சரிவர செயல்படுத்தப்பட்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்து, 2047ம்ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ந்த நாடாக உயர்த்தும். வரவேற்கத்தக்க அம்சங்கள்
ஆடிட்டர் முத்துராமன், தலைவர், திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு:வரும், நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில், வருமானவரிச் சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. வருமானவரியில், 12 ரூபாய் வரை வருமானத்துக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், சேமிப்பு இனங்களை கழித்தால், வரி செலுத்த வேண்டியிருக்காது. அரசு பணியாளருக்கும் நல்ல அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. மூத்த குடிமக்களுக்கான 'டி.டி.எஸ்., பிடித்த உச்சவரம்பும், வாடகை வருவாய் உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. 'ரிட்டர்ன்' தாக்கல் தவறுகளை நான்கு ஆண்டுகளுக்குள் திருத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தனி நபர்களும் பயன்பெறும் திட்டங்கள் அதிகம் உள்ளன.தொழில்துறையினருக்கு, சுங்கவரியிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது; பல வரியினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசுக்கு வரி வருவாய் உயர்த்தும் திட்டங்கள் இருப்பதால், நாட்டில் கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை வேகமெடுக்கும்; வரி விகிதங்களை மாற்றி கொடுத்துள்ள மிக சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.