மக்களை கவரும் பயோ ஜவுளி ரகங்கள்
துணி மற்றும் பேஷன் உலகம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லதொரு மாற்றத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கழிவு உருவாக்கப்படாத தொழில்நுட்பங்கள் இப்போது தேவை மட்டுமல்ல... தேவைக்கு மேலான கட்டாயமாக மாறிவிட்டது.இந்நிலையில், பயோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்து உருவாக்கும் புதிய வகை துணிகள் எதிர்காலத்தை கட்டமைக்க ஆரம்பித்துவிட்டன.இயற்கையாக கரையும் வகையில், தண்ணீரில் படர்ந்து வளரும் செடிவகை, காளான், நுண்ணுயிர், வாழைநார், தேங்காய் நார் போன்ற இயற்கை அல்லது ஆய்வகத்தில் வளர்க்கப்படும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவது, 'பயோ' துணிகள் எனப்படுகின்றன.இத்தகைய துணிகள், நீர்நிலை மாசுபாட்டையும், ரசாயனங்கள் பயன்பாட்டையும் குறைக்கின்றன; இயற்கையோடு மீண்டும் இணையக்கூடிய சுழற்சி அமைப்பையும் உருவாக்குகின்றன.'பயோ' துணிகள், இயற்கையுடன் பிணைந்து உருவாக்கப்படுவதால், அணிபவர் உடலை உணரும், சூழ்நிலைக்கு ஏற்ப நன்மை அளிக்கும் வகையில் உருவாக்கு கின்றன. உடல் வெப்பத்தை கணிக்கும் ஆடை
அணிபவரின் வியர்வையை கிரகித்து, சீரான காற்றோட்டம் நிறைந்த 'டி-சர்ட்' போன்ற ஆடைகள், உடற்பயிற்சி ஆடைகள், உடலின் வெப்ப நிலையை காட்டும், 'ஸ்மார்ட் ஜாக்கெட்' ஆகிய, தற்போதைய ஆராய்ச்சி திட்டங்களில் ஒரு பகுதியாகவே உள்ளன.புதிய தொழில்நுட்பங்கள் மருத்துவம், விளையாட்டு, மாறுபட்ட வாழ்க்கை முறை ஆகிய துறைகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இவ்வகை தொழில் வளர்ச்சிக்கு, இந்தியா மட்டுமே முன்னோடி நாடாக விளங்குகிறது.குறிப்பாக, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற ஜவுளி நகரங்கள், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தை இணைக்கும், உலக அளவிலான 'பயோ- ஏஐ' தொழில் மையங்களாக மாற முடியும்.'ஸ்டார்ட் அப் இந்தியா', 'மேக் இன் இந்தியா', 'அடல் இனோவேஷன் மிஷன்' ஆகிய அரசு திட்டங்கள் மூலம் மாணவர்கள், ஸ்டார்ட் - அப்'கள், தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சேர்ந்து இந்த துறையில் புதிய பாதைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:இந்திய ஜவுளித்துறையின் புதிய அடையாளம், வெறும் ஆடைகள் இல்லை; புத்தாக்க சக்தி நிறைந்த பசுமை உணர்வுள்ள அனுபவமாக பார்க்கப்படுகிறது. வழக்கம் போல், நுாலில் இருந்து துணியை உருவாக்கி, ஆடைகளை உருவாக்கவில்லை.அறிவையும், இயற்கையையும் ஒன்றிணைக்கும் வகையில், புதிய நுாலிழையை திருப்பூர் உருவாக்குகிறது. உலகை கவரும் வகையிலான, 'பயோ' துணிகளும், புத்தாக்கமும், இந்திய ஜவுளித்துறையில் புதிய தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.