மேலும் செய்திகள்
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
18-Mar-2025
திருப்பூர்; 'உயிரியல் தேர்வு சற்று கடினம்; வரலாறு பாடம் ரொம்ப சுலபம்,' என, தேர்வெழுதிய மாணவர்கள் சிலர் கூறினர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில், நேற்று நடந்த உயிரியல் தேர்வை, 6,179 பேர் எழுதினர். தாவரவியல், 389 பேர், வரலாறு, 2,085 பேர், வணிக கணிதம், 928; அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜி., (தியரி) 77 பேர், டெக்ஸ்டைல் டெக்னாலஜி (தியரி) 30 பேர், வணிக கணிதம் மற்றும் அலுவலக நிர்வாகம் 74 பேர் எழுதினர்.தேர்வு குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:நவிநிதா: உயிரியல் தேர்வு, சற்று கடினமாகவே இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை. புத்தகத்தின் உட்புறத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.கட்டாய வினாக்கள் கூட, சற்று கடினமாகத்தான் இருந்தது. இருப்பினும், தாவரவியல் தேர்வு சற்று எளிமையாக இருந்தது. மொத்தத்தில் படித்து சென்றதில் முழுமையாக வரவில்லை.அபிநயா: வரலாறு பாடத்தேர்வு மிக சுலபம். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிக எளிதாக இருந்தது. முக்கிய வினாக்கள் என, குறிப்பிட்டு படித்த கேள்விகள் வந்திருந்தது; தேர்வெழுதிய பின் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். எந்தவொரு கேள்வியையும் விடாமல் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது.அன்பரசன்: உயிரியல் தேர்வு கடினமாக இருந்தது; சில வினாக்கள் எங்கிருந்து கேட்டனர் என்பதையே புரிந்துக் கொள்ள முடியவில்லை. புத்தகத்தின் உட்புறமிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. குழப்பமாக தான் இருந்தது. ஆனால், தாவரவியல் பாடம் சார்ந்த கேள்விகள் சுலபமாக இருந்தது. 'நீட்' சார்ந்தேபள்ளி தேர்வும்!
உயிரியல் பாட ஆசிரியர் கூறியதாவது:உயிரியல் தேர்வை பொறுத்தவரை எளிமையாகத்தான் இருந்தது. கட்டாய வினா, கொஞ்சம் கடினமாக இருந்தது. புத்தகத்தின் உட்புறம் இருந்து கேட்டிருந்தனர். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய வினா எளிதாக இருந்திருக்கும்.கட்டாய வினாவை சரியாக எழுதியிருந்தால், முழு மதிப்பெண் பெறும் வாய்ப்பு கூட வரும். வினாத்தாள், 'பாஸ்' செய்யும் அளவுக்கு தான் இருந்தது. 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில், அறிவியல் பாடம், 'நீட்' தேர்வு சார்ந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.சரியான விடை, தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக; கூற்று, காரணம் என்பது போன்ற ஒரு மதிப்பெண் வினாக்கள், 'நீட்' தேர்வு சார்ந்ததாகவே கேட்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
18-Mar-2025