கசந்த பாக்கெட் ஜூஸ்
திருப்பூர்; சமீபத்தில் பல்லடம் அருகே நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவின்போது, பக்தர்கள் அருந்துவதற்காக ஜூஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. சில பக்தர்கள் கசப்பாக இருந்ததாக தெரிவித்தனர். பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், ''ஜூஸ் பாக்கெட்டுகளை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்'' என்று கோரி மனு அளித்தார். உணவு பாதுகாப்பு துறையினரை அழைத்த தனி துணை கலெக்டர், 'இந்த ஜூஸ் பாக்கெட்டுகளை எடுத்துச்சென்று பரிசோதனை செய்யுங்கள். குறிப்பிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, உத்தரவிட்டார்.