வார்டுதோறும் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்
திருப்பூர் : குப்பை விவகாரத்தில் மாநகராட்சி அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பா.ஜ., வினர் 60 வார்டுகளில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் அன்றாடம் சேகரமாகும் குப்பையை கடந்த சில மாதங்களாக முறையாக கொண்டு சென்று கொட்ட பாறைக்குழி கிடைக்கவில்லை. இதற்கு முன்பு கொட்டிய இடம், தற்போது புதியாக கொட்ட சென்ற இடம் என, செல்லும் இடம் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, இரு வாரங்களுக்கு மேலாக மாநகரின் பல இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்ளாமல், தற்போது வரை அலட்சியமாக செயல்படுவதாக அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 60 வார்டுகளில் போராட்டம் பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், திருப்பூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை படுதோல்வியை கண்டித்து, மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 60 வார்டுகளில் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முககவசம் வழங்கல் இன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, பா.ஜ., செரங்காடு மண்டலம் சார்பில், நேற்று பொதுமக்களுக்கு இலவச முக கவசம்வழங்கி போராட்டம் குறித்து தெரிவித்தும், மாநகரில் நிலவும் குப்பை பிரச்னை குறித்து தெரிவித்தும் விழிப்புணர்வு செய்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்பான நோட்டீஸ்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர். மண்டல தலைவர் மந்திராசலமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் அருண், மாவட்ட செயலாளர் கார்த்திக், முன்னாள் மண்டல தலைவர் அங்குராஜ், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மண்டல் பொது செயலாளர் சிவா, துணைத்தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமான குப்பை கழிவுகள் ஊத்துக்குளி பகுதியில் உள்ள மொரட்டுப்பாளையம் பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டும் முயற்சி நடந்தது. இதற்காக அப்பகுதிக்கு சென்ற மாநகராட்சி வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டன. பொதுமக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, போலீசார் கடுமையாக நடந்து கொண்டது மற்றும் பாறைக்குழியில் குப்பை கொட்டி நிரப்பும் மாநகராட்சியின் செயல்பாடுகள் ஆகியன குறித்து அன்றைய தினம் இரவு அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற அனைத்து தரப்பினரும், ஒருமித்த முடிவாக, நாளை (25ம் தேதி) காலை வெள்ளியம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்தனர். நேற்று திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., தலைமையில், மாநகராட்சி, போலீஸ், அரசியல் அமைப்பினர் இதில் பங்கேற்றனர். இந்த பேச்சு வார்த்தையில், மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் ஊத்துக்குளி பகுதி பாறைக்குழிகளில் கொண்டு வந்து கொட்டப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. இதனால், நாளை (25ம் தேதி) அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக, அமைப்பினர் தெரிவித்தனர்.