கொத்தடிமை தொழிலாளர் முறை கூடாது ; பயிற்சி முகாமில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
- நமது நிருபர் -'கொத்தடிமை தொழிலாளரை பணி அமர்த்தும் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் தொடர்பாக, அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிகின்றனரா என கண்டறிந்து, மீட்கவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரணத்தொகை பெற்றுக்கொடுத்து, மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். கொத்தடிமை தொழிலாளர் அதிகம் பணிபுரிய வாய்ப்பு உள்ள இடங்களான, கோழிப்பண்ணை, கரும்பு வெட்டும் தொழில், செங்கல்சூளை, தறி பட்டறைகள், தேங்காய் களம் ஆகியவற்றில் ஆய்வுகள் நடத்தவேண்டும். கொத்தடிமை தொழிலாளர்களை பணி அமர்த்தும் உரிமையாளர் மீது, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக, பொதுமக்கள், 1800 4252650 என்கிற எண்ணில் அல்லது 155214, 112 ஆகிய இலவச எண்களில் அழைத்து, புகார் அளிக்கலாம் என, பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்தியன், பிரவீன் கவுதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.