எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை பல்லடத்தில் ரூ.4 கோடியில் அமைகிறது
பல்லடம்; பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை அமைகிறது.பல்லடத்தில், கோவை- ரோட்டில், அரசு மருத்துவமனை உள்ளது. வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். சிலருக்கு கூடுதல் சிகிச்சை பெற, திருப்பூர் அல்லது கோவை அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனையிலேயே மேல் சிகிச்சை பெற வசதியாக, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை அமையவுள்ளது. நான்கு கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள மருத்துவமனைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கவிதாமணி, தி.மு.க., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பூமி பூஜையை துவக்கி வைத்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில், எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, இனி பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு இங்கேயே சிகிச்சை பெற்று பயனடைய முடியும். மருத்துவமனைக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.