உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 20 பேரை தாண்டாத வார்டு சபா கூட்டங்கள்: சங்கடத்துடன் நடந்த சடங்கு

20 பேரை தாண்டாத வார்டு சபா கூட்டங்கள்: சங்கடத்துடன் நடந்த சடங்கு

திருப்பூர்;திருப்பூரில் நேற்று நடந்த வார்டு சபா கூட்டங்களில் சொற்ப எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுதோறும் வார்டு சபா குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் அதன் கவுன்சிலர் தலைமையில், ஏழு உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஆளும்கட்சியினர் தேர்வு செய்து நியமிக்கப்பட்டனர். இந்த குழு அமைக்கப்பட்ட புதிதில் வார்டு சபா கூட்டம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, பிசுபிசுத்தது. நேற்று மாநகராட்சி வார்டுகளில் வார்டு சபா கூட்டம் நடந்தது. சில வார்டுகளில், அதன் கவுன்சிலர்கள் இல்லாதது, கூட்டம் நடத்த இடம் கிடைக்காதது போன்ற காரணங்களால் கூட்டம் நடத்தப்படவில்லை. மீதமுள்ள வார்டுகளில் நடந்த கூட்டத்திலும் 10, 20 பேர் என்ற சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் பங்கேற்றனர். வெளியேறிய மக்கள் வார்டு சபா கூட்டத்தில் பங்கேற்க, எஸ்.ஆர். நகர் வடக்கு பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் வந்து அமர்ந்தனர். கூட்டம் துவங்குவதற்கு சில நிமிடம் முன், அனைவரும் ஒன்றாக எழுந்து வெளியேறினர். ''வார்டு சபாவில் தகுதியில்லாத நபர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் உள்ள நபர்கள் இடம் பெற்றுள்ள கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க விரும்பவில்லை'' என அவர்கள் தெரிவித்தனர். மழையால் முடிந்தது மாட்டுக் கொட்டகை வளாகத்தில், மரத்தடியில் சேர், டேபிள் அமைத்து சபா உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். இதில், பங்கேற்ற மக்கள், சாக்கடை சீரமைத்தல், ரோடு பணிகள், தெரு விளக்கு, மின் கம்பம் மாற்றியமைத்தல், மங்கலம் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து வேண்டுகோள் விடுத்தனர். கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மழைத்துாறல் விழுந்தது. இதனால் திறந்தவெளியில் நடந்த கூட்டம் உடனடியாக நிறைவு பெற்றது. சரமாரி குற்றச்சாட்டு திருப்பூர் குஜராத்தி திருமண மண்டப வளாகத்தில், 44 வது வார்டு சபா கூட்டம் நடந்தது. கவுன்சிலர் கண்ணப்பன் தலைமை வகித்தார். குடிநீர் சப்ளை முறையாக இல்லை, உரிய ஊழியர்கள் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். தெரு விளக்குகள், சாக்கடை கால்வாய், ரோடு சீரமைத்தல், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சரமாரியாக பேசினர். முக்கியமாக சொத்து வரி விதிப்பில் தங்கள் பகுதி 'ஏ' ஜோன் பிரிவில் சேர்க்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அதை மாற்றம் செய்ய வலியுறுத்தினர். 'ஒன் டூ ஒன்' கூட்டம் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், இந்திரா நகரில், 48 வது வார்டுக்கு உட்பட்ட வார்டு சபா கூட்டம் கவுன்சிலர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. ஷாமியானா அமைத்து, டேபிள் சேர் போட்டு வார்டு சபா உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். எதிர்புறத்தில் ஒரு வரிசை சேர் அமைக்கப்பட்டு அதில் பொதுமக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் வந்து அமர்ந்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். குடிநீர் வசதி, ரோடு சீரமைத்தல், பிரதான ரோட்டில் தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றுங்க! சிறுபூலுவபட்டி சமுதாயக் கூடத்தில், 25வது வார்டு சபா கூட்டம் கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் நடந்தது. அதில், மா.கம்யூ. சார்பில் அளித்த மனுவில், அணைப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றி, கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். சிறுபூலுவபட்டி ரோட்டில் மழை நீர் தேங்காமல் தவிர்க்கவும், வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க வேண்டும், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் குறித்து மக்கள் மனு அளித்தனர். --- மாநகராட்சி வார்டு சபா கூட்டங்கள் திருப்பூரில் நடந்தன. சொற்ப எண்ணிக்கையிலான மக்களே வந்திருந்தனர். இதோ, இந்தக் காட்சிகளே சாட்சி. வார்டு 38, 44, 48 ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்கள். 'தினமலர்' செய்தியை சுட்டிக் காட்டி விழிப்புணர்வு மாநகராட்சி, 38 வார்டு சபா கூட்டம், எஸ்.ஆர். நகர் ரத்ன விநாயகர் கோவில் மண்டபத்தில் நடந்தது. கவுன்சிலர் சாந்தாமணி தலைமை வகித்தார். வார்டு சபா உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கு அடிப்படை வசதி ஏற்படுத்துதல்; சாக்கடை வசதி, தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அப்பகுதியினர் மனு அளித்தனர். இதில், திடக்கழிவு மேலாண்மையில், குப்பை பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது. நேற்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி குப்பை தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை