காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு, சேர் வீச்சு
அவிநாசி; அவிநாசியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.அவிநாசி, மேற்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று அவிநாசி வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் பழனியப்பன் தலைமை தாங்கினார்.''அவிநாசி நகர நிர்வாகிகளுக்கு முறையாக தகவல் தரவில்லை; சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறி, முன்னாள் நகர பொறுப்பாளர் பொன்னுக்குட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மாணிக்கம், ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் நவநீத கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவரிடம், 'வட்டார மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கிராம அளவில் உள்ள நிர்வாகிகளை மட்டும் வைத்து, ஏன் நடத்த வேண்டும்?' என கேள்வி எழுப்பினர். தள்ளுமுள்ளு
இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நடந்த வாக்குவாதம் மற்றும்தள்ளுமுள்ளு காட்சிகளை தொண்டர் ஒருவர் தனது மொபைல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஆத்திரம் அடைந்த மாவட்ட தலைவர், மேடையில் இருந்து வேகமாக சென்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த தொண்டரின் மொபைல்போனை தட்டிவிட்டார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாக்குதல்
சேவூர் வட்டார தலைவர் லட்சுமணசாமி, ஊடகப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் நவநீதக்கண்ணனை தாக்கினார்.நவநீதக்கண்ணன் சுதாரித்து லட்சுமணசாமியை தாக்க முற்பட்டார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சேர்களை துாக்கி அடித்து உடைத்தும், வாட்டர் பாட்டில், பைல்களை துாக்கி வீசி ஒருவருக்கொருவர் தாக்க முற்பட்டனர். மண்டபத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின், வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்ட நிர்வாகிகளை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தகவல் சென்றதா?
மாவட்ட தலைவரிடம் கேட்டபோது, ''கூட்டம் குறித்த தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்படி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.